பக்கத் துணை இருப்பாய் பரிமளமே!

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 38

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.  அபிராமி அந்தாதி - 28)

இன்றைய சூழலில் நாம் எந்த வழிபாட்டை செய்தால் நம் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று அடிக்கடி எண்ணுவதுண்டு என்றாலும் வழிபாட்டைக் குறித்து எதைச் சொல்ல வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். (உ.ம்) இந்தத் துதியைச் சொல்லுங்கள் இன்ன பலன் கிடைக்கும், இந்த சாமிக்கு இந்த விளக்கை இந்தப் பொழுதில் இப்படி ஏற்றுங்கள் என்றெல்லாம் நிறைய பரிந்துரைகள் நமக்கு வருவதை நாம் காண்கிறோம். நிறைய நேரங்களில் நாம் சலிப்படைகிறோம்.

அவ்வாறு இல்லாமல் நமக்கு அனுபவத்தில் உணர்ந்த அபிராமி பட்டர் நம்மை சாத்தியப்படுத்த ஆலோசனையை சொல்கிறார். இறையருள் அனுபவத்தை, பிறருக்கு உணர்த்த துதியை சொல்லுக. துதியின் பொருளை சொன்னவர் நோக்கில் பொருள் அறிந்து, உணர்ந்து, அனுபவித்துச் சொல்லுக. தொழும் அடியவர்கள் அவர்கள் எந்த செயலை (சமய ஒழுக்க நெறியை) பின்பற்றி அதை அடைந்தார்களோ, அதே தவநெறியை பின்பற்றுக. அப்படி பின்பற்றினால் உலகியல் இன்பமாகிற அரசு வாழ்க்கைக்கான துன்பம் நீக்கிய இன்பத்தை அடையலாம். உடலை விட்டபோது சிவலோகம் என்னும் முக்தி உலகத்தை அடையலாம் என்று தோத்திரத்தின் பொருளையும், அதை உணர்ந்து சொல்ல வேண்டிய நெறியையும், நமக்கு வரையறுத்து விளக்கியுள்ளார்.

அப்படியும் இயலவில்லை என்றால் வணங்குபவர்களை வணங்குங்கள் என்று நமக்கு மறைமுகமாக வலியுறுத்துகிறார். இந்த பாடலின் கடைசி வார்த்தையால் அனுபவம் ஒன்றே, அதை அடைவதனாலேயே பெறமுடியும், அப்படி பெற்றுத் தந்தால் தான் அது சமய நெறி என்று பிற நெறியிலிருந்து சமய நெறிக்குண்டான உயர்வையும், நமக்கு இப்பாடலில் வெளிப்படுத்துகிறார்.

‘சொல்லும் பொருளும்’ என்பதில் பொருள் என்பது சைவத்தைப் பொறுத்தவரை முப்பொருளையும், பசு, பதி பாசம், சாக்தத்தை பொறுத்தவரை பிரம்மம் என்பதை உணர்த்த வல்லதாகும்.  

‘சொல்லும்’ - என்ற சொல்லானது சக்தி தத்துவ நோக்கில் பொருளை உணர்த்தும் வல்லமை பெற்ற வரிசையாக அமைந்த ஒலியாகும் என்பதோடு மட்டுமல்லாமல் ‘மொழிக்கும் நினைவிற்கும் எட்டாத’ (பாடல் எண்  - 87) தன்மையுள்ள இறைத் தன்மையை வெளிப்படுத்தும் வல்லமை கொண்ட ஆற்றலை குறிக்கும். இதை பொருளுணர்த்தும் ஆற்றல் ‘சப்த சக்தி’ என்று வடமொழியில் குறிப்பிடுவர். அதோடு மட்டுமல்லாமல் தில்லை வாழ் அந்தணர் தம் ‘அடியார்க்கும் அடியேன் - திருவாரூர் தியாகராஜா’.

 ‘உலகெலாம் - சிதம்பரம் நடராஜா’, ‘சும்மாயிரு சொல்லற அருணாசல முருகன்’ இதுபோல இறைவனால் வெளிப்படையாக அசரீரியாக உணர்த்தப்பட்ட சொற்களும் சொல்லனவே சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. வடமொழியை மையப்படுத்தி அபிராமி பட்டர் ‘பத சாஸ்திரம்’ என்ற இலக்கணத்தையும் சொல் என்றே குறிப்பிடுகின்றார். அந்த நோக்கில் சொல் என்பது இறைவனால் சொல்லப்பட்டது பொருள் உணர்த்தும் தன்மை உள்ளது உண்மையையும், நன்மையையும், செய்யும் ஆற்றல் பெற்றதையே சொல் என்று குறிப்பிடுகின்றார்.

‘பொருளும்’  காதால் கேட்கப்பட்ட ஒலியை அடிப்படையாகக் கொண்டு இதயத்தால், மனதால் தோற்றுவிக்கப்பட்ட நினைவுத் தன்மையையே பொருள் என்பர். சிறப்பாக காதால் கேட்பதை ஒலி என்றும் நாவினால் மொழிவதை மொழியென்றும், இதயத்தால் உணர்வதை பொருள் என்றும், பொதுவில் சாத்திரங்கள் பரிந்துரைக்கின்றது. அந்த நோக்கிலும் அதனுடன் கூடுதல் தன்மையாக வடமொழியில் பொருளுணர்த்தும் ஆற்றலை அர்த்த சக்தி என்று குறிப்பிடுவர். இதை ஒரு உதாரணத்தால் குறிப்பிட முயல்வோம்.

 சில சொற்களுக்கு ஒரு பொருளை மட்டுமே உணர்த்தும் வல்லமை இருக்கிறது. ஆனால் சில சொற்களுக்கு பல பொருட்களை சுட்டும் வல்லமையிருக்கிறது. ஸ்ரீ  என்ற சொல்லானது திரு. லக்குமி, மாண்புமிகு போன்ற பொருளையும் உணர்த்த வல்லது. இதுபோன்ற பொருள் உணர்த்தும் தன்மையைத்தான் அபிராமி பட்டர் குறிப்பிடுகின்றார். ‘என நடமாடும்’ இந்த சொல்லானது ‘சொல்லும், பொருளும்’ என்று இணைத்தே பொருள் கொள்ளத்தக்கது. நாட்டிய சாத்திரத்தில் சொல் என்பது ஒரு இசையை சுட்டும் ஒலி குறிப்பு, ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அசைவுண்டு.

அதையே ‘சொல்லும், பொருளும் என நடமாடு’ என்கிறார். நடராஜாவானவர் ஆடல் கலையை பரதம் என்னும் சொல்லால் உணர்த்துகிறார். அதற்கு பாவம், ராகம், தாளம் இவை மூன்றும் இணைந்ததற்கு பரதம் என்பது பொருள். பாவத்தை - சிவகாமிக்கும், ராகத்தை நாரதருக்கும், தாளத்தை நந்திக்கும், பத சாஸ்திரம் என்னும் வடமொழி இலக்கணத்தை பாணினிக்கும் நடனமாடி உணர்த்தியதாக புராணம் தெரிவிக்கிறது. மேலும் நடராஜாவானவர் பஞ்சகிருத்யம் என்ற செயலை சதாசிவத்திற்கு உணர்த்தினார் என்கிறது ஆகமம். இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டே ‘சொல்லும் பொருளும் என நடமாடும்’ என்றார் அபிராமி பட்டர்.

‘துணைவருடன்’ துணைவர் என்பது உமையம்மையின் கணவனை குறிக்கும் சொல்லாகும்.  அன்பின் வழி மணந்த கணவனுக்கு காந்தன் என்று பெயர்.இது மூன்றுமே சிவன், சக்தி, அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு என புரிந்து கொள்ள உதவுகிறார் பட்டர். சொல் சிவம், பொருள் சக்தி தொடர்பு - உணர்வு (நினைவு) ‘புல்லும்’ - என்ற சொல் தழுவுவது என்று பொருள் தரும். சிவன் சக்தியைத் தழுவுவது, சொல் பொருளைத் தழுவினால் நினைவு தோன்றும். சிவன் சக்தியைத் தழுவினால் அருள் தோன்றும். சிவசக்தி உறவு என்பது அன்பின் வழி என்பதால் பக்தியினால் (உள்ள உணர்வினால்) அனுபவிக்க முடியும்.

அறத்தின் மனமென்றால் அறிவு சார்ந்த ஞானத்தினால் அனுபவிக்க முடியும். செயல் சார்ந்து என்றால் பாவத்தைப் போக்கிக் கொள்ள முடியும். முன்செயலின் விளைவு சார்ந்து என்றால் விரும்பிய பலனை அடைய முடியும். ‘புல்லும்’ என்ற இந்த சொல்லானது அன்பு சாரும் போது தாட்சாயிணியும் அறத்தைச் சாரும் போது பார்வதியையும், செயலைச் சாரும் போது உமா மகேஸ்வரியையும் குறிக்கும். இந்த நான்கு சக்திகளுக்கும் சிவனுக்கும் உள்ள தொடர்பானது ஆகமத்தில் ஆன்ம சாதனமாகவும், அறிவு சாதனமாகவும், உடல் சாதனமாகவும், உள்ளம் சாதனமாகவும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கின் தொடர்பையே ‘புல்லும்’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். உதாரணம் காட்டி இதை மேலும் விளக்கமாக காண்போம். ‘நெடியவன் தாழ்ந்து நோக்கினான்’ என்ற சப்தத்திற்கு அர்த்தத்தை நான்கு விதங்களாக கூறலாம்.

 நெடியவன் ராமன் தாழ்ந்து (குனிந்து) நோக்கினான் (பார்த்தான்) என்ற இப்பொருள் தரும் சொல்லை கம்பன் ராமன் அகத்தியரை வணங்கிய போது சொன்னார்,

*  மிக உயரமானவன் ராமன் என்ற உடலின் உயரத்தை குறித்தது.
* தாழ்ந்து என்ற சொல்லால் அகத்தியரின் உடலின் உயரத்தை குறித்தது.
*  உயர்ந்த பதவியில் இருந்த பொழுதும் ராமன் பணிவு என்ற பண்பை மிகுந்து பெற்றிருந்ததனால் தாழ்ந்து வணங்கினார்.
* அகத்தியர் குள்ளமான போதும் விண்ணவர் வணங்கியேத்தும் உயர்ந்த ஆற்றலையும் தவத்தையும், பணிவையும் பெற்றிருந்தார் அந்த உயர்வுத் தன்மையையே குறித்தது.
*  இவ்வாறு சொல்லுக்கும், பொருளுக்கும் உண்டான தொடர்பு வெவ்வேறு பொருளை தருவது போல சொல்லாகிய சக்தியையும், பொருளாகிய சிவனையும் உணர வேண்டும். இது போன்ற நுட்பத்தை விளக்கவே ‘புல்லு’ என்ற சொல்லை பயன்படுத்தினார்.

‘பரிமளம்’ என்ற வார்த்தையானது எட்டு வகையான போகத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் கலைச் சொல்லாகும். இதற்கு அவையணிகலன், ஆடை, தாம்பூலம், பரிமளம், சங்கீதம், பூமவளி, பெண், போஜனம் என்று பொருள். இவை அனைத்தையும் தன்னை வணங்குவோருக்கு அருள்பவள் என்ற நோக்கில் இச்சொல்லை பயன்படுத்துகின்றார் பட்டர்.
அதை ஒவ்வொன்றாய் இனி காண்போம்.

 அவையணி - அறத்தினால் தோன்றிய நன் புகழ் ‘முத்தாரமும்’ -53  ஆடை - செல்வவளத்தை சூட்டுகின்ற வகையில் அமைந்த உயர்ந்த பிறரால் விரும்பப்படும் ஆடை ‘பன்மணிக்கோவையும் பட்டும்.’ - 37 தாம்பூலம் - நன்கு உண்டதை செரிக்க வைப்பது தாம்பூலம். தாம்பூலம் தரித்த வாயினால் கமழ்பவள். ‘தாம்பூல பூரிதமுக்யை நமஹ’ என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம்.

பரிமளம் - (வாசனை) மிகுந்த வாசனையுடைய சாந்தை முகத்தில் பூசிக் கொண்டிருப்பவளும், மார்பில் சந்தனத்தையும் கூந்தலில் வாசனை மிகுந்த பூவையும், நெற்றிப் பொட்டில் வாசனையான கஸ்தூரியையும் அணிந்திருப்பவள் உமையம்மை ‘உச்சித்திலகம்’-1 சங்கீதம் - இனிய இசையால் மகிழ்விப்பவளும் இசை வடிவாய் நின்ற நாயகியே’ - 49 பூவமளி - பரமனால் பணி செய்த மலர் படுக்கையைக் கொண்டவள். ‘சதாசிவபர்யங்க நிலயா’ என்கிறது லலிதா ஸஹஸ்ர நாமம். ‘கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே’- 98 சக்தி தழைக்கும் சிவமும் அன்பினால் சிவன் பார்வதிக்கு பணி செய்வதாக அறிய வேண்டியது.

பெண் - அறத்தோடும், அன்போடும் கூடிய இல்வாழ்க்கை அமைய அருள்பவள். அன்பு அகலாத மனைவியும் - பதிகம் போஜனம் - ஐம்புலன்களுக்கும் மகிழ்வாகிய உணவைத் தரும் தன்மையுடையவள் உமையம்மை. ‘ஊரும், முருகு, சுவை ஒளி ஊறொலி ஒன்று படச் சேரும் தலைவி’- 68. மேலும் ‘பரிமளம்’ என்கின்ற வார்த்தைக்கு மதுரை தமிழ் பேரகராதியானது. மகிழ்ச்சி, புணர்ச்சி என்ற பொருளையும் தருகிறது.

தன்னையறியாமல் துன்பத்தில் உழலும் ஆன்மாக்கள் ‘ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி ’ (பாடல் எண் - 7)
தான் எடுத்துக் கொள்ளும் யாக்கையால் வருகின்ற துன்பத்தை நீக்கிக் கொண்டு, தன்னுணர்வு பெற்று இறையுணர்வு பெறும் வரை உடலில் தாழ்வான மலத்தன்மை வெளிப்படாமல் ஆன்ம உணர்வுக்கு தடை செய்யும் நோய் வராமல் ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் தன்மையையே - ‘பரிமளம்’ என்கின்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். ‘பூங்கொடியே’ என்ற வார்த்தையால் மலர்கொடியாக உமையம்மையை வர்ணிக்கின்றார் அபிராமி பட்டர். கொடியானது மென்மைத் தன்மையை உடையது. தாமரையைப் போன்று மென்மைத் தன்மையுடையவள் என்பதை ‘வதனாம் புயமும் கராம் புயமும்’ (பாடல் எண் - 58) என்று சுட்டினார்.

‘பூங்கொடி’ என்பதனால் வாசனைத் தன்மையுடைய உமையம்மையின் கூந்தலானது வாசனை மலர்கள் சூட்டப்பட்டுள்ளதாலும் மார்பில் மலர் மாலை சூடப்படுவதாலும் வாசனை மிகுந்தவளாக இருப்பதாலும், கொடியில் உள்ள மலரும் மணம் பரப்புகிறது. ‘செண்பக மாலையும்’ - காப்பு மரத்தையோ, வேறு பொருளையோ, சார்ந்து படர்வதனால் ‘கொடியே’ என்று உமையம்மையையும் ‘கொம்பே’ என்று சிவபெருமானையும் இணைத்து கொடி மரத்தை சார்ந்து படர்ந்தது போல் சக்தி சிவனை சார்ந்து படர்கிறாள் என்பதனால் ‘கொடி’ என்றார்.

கொடி நீண்டு கொண்டே போவது போல் உமையம்மையானவள் குழந்தை வரம் தந்து வம்சத்தை நீட்டிக்கச் செய்வது என்ற தன்மையினாலும் குலதெய்வம் எனப்படுகின்றார்.  கொடியானது பருத்தில்லாமல் மெலிந்திருப்பது போல்
உமையம்மையானவள் மெலிந்திருக்கிறாள். ‘மெல்லிய நுண்ணிடை (பாடல் எண் - 91) இந்த ஐந்து தன்மையும், பூங்கொடிக்கும் உமையம்மைக்கும் ஒத்த தன்மையோடு இருப்பதனால் பூங்கொடியே என்றார். ‘நின்’ என்ற வார்த்தையால் உமையம்மை தன் முன் நிற்பதையும், உமையம்மையை தான் முன்னிலையில் கண்டதையும், வேறுயாராலும் எளிதில் காணமுடியாத தன்மையைப் பெற்றிருப்பவள் உமையம்மை என்றாலும், தான் முன்னிலையில் பார்த்த சிறப்பையே இந்த ‘நின்’ என்று குறிப்பிடுகின்றார்.

உபாசகர்களைப் பொறுத்தவரைஉமையம்மையானவள் ஆத்மாவில் மந்திரமாகவும்,  பரார்த்த ஆலயங்களில் எழுந்தருளியிருக்கும், அபிராமி, சிவகாமி, மீனாட்சி போன்ற விக்ரஹமாகவும், முன்னிலையில் அவரவர் குருவால் கொடுக்கப்பட்டதும், கை முஷ்டி அளவே உள்ளதாக சிறிய உருவமுடைய உமையம்மையையும் சாத்திரங்கள் விளக்குகின்றது. அதில் ‘நின்’ என்கின்ற வார்த்தையால் ஆத்மார்த்த பூஜையில் தான் வணங்கும் விக்கிரகத்தையே ‘நின்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். ‘அறிவிழந்து ’ ‘சுரும்பிற் களித்து ’ மொழி தடுமாறுவது இயல்பு என்றாலும் பட்டர் ‘நின்’ என்ற வார்த்தையால் சுட்டுகிறார்.

‘‘புது’’  என்ற வார்த்தையால் என்றும் புதுமையாக இருப்பவள் உமையம்மை என்ற குணத்தை வரையறுக்கிறார். உலகிலுள்ள பொருள் அனைத்தும் தோன்றும் போதும் மட்டுமே புதுமையாக இருக்கும், அது நிலைத்தால் பழமையாக ஆகிவிடும். அதனால் தோற்றலும், நிலைத்தலும், அழிதலும் இல்லா தன்மையையே ‘‘புது’’ என்கிற வார்த்தையால் குறிப்பிடுகிறார். மாறிக் கொண்டேயிருப்பதனால் மாயை என்ற பெயரை உடையவள் உமையம்மை. மாறிக் கொண்டேயிருக்கக் கூடிய பொருள் எப்பொழுதும் புதியதாகவேயிருக்கும். அபிராமி என்ற பெயருக்கு மாறிக் கொண்டேயிருக்கக் கூடிய தன்மையை உடையவள் என்பது பொருள். ‘புது’ என்ற வார்த்தையால் திருக்கடையூரில் எழுந்தருளியிருக்கும் கூடிய அபிராமியையே குறிப்பிடுகின்றார்.

முனைவர்  பா.இராஜசேகர சிவாச்சாரியார்

× RELATED காப்பான் காளிங்க நர்த்தனன்