×

வேண்டினால் வேண்டும் வரங்களை தரும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் தமிழகம்  கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல்  பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். வனப்பகுதியில் உள்ள பட்டியில் ஒரு பசுமாடு மட்டும் பால் தராமல் இருந்துள்ளதை கண்ட மாடு மேய்ப்பவர் பசுமாட்டை கவனித்தபோது பசு தினமும் வனப்பகுதியில் உள்ள தோரணப்பள்ளம் அருகே உள்ள ஓரிடத்திற்கு சென்று நிற்பதும் அங்கு மடியிலிருந்து பால் தானாகவே சொரிவதைக்கண்டு ஆச்சரியமடைந்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

கிராம மக்கள் அந்த இடத்தை சென்று பார்த்தபோது சுயம்பு வடிவ சிலை இருந்தது. இதையடுத்து அந்த இடத்தில் கூரை அமைத்து பண்ணாரிஅம்மன் என பெயரிட்டு அம்மனை வழிபட்டு வந்தனர். அம்மன் ஆண்டுதோறும் பங்குனி மாதம் விழா எடுக்க உத்தரவிட்டதையடுத்து ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரசித்தி பெற்ற குண்டம் திருவிழா நடைபெற்று வருகிறது. கூரை அமைத்து சிறிய கோயிலாக இருந்த பண்ணாரிஅம்மன் திருவருளால் நாளடைவில் பிரசித்தி பெற்று அம்மன் திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற தலமாக மாறிவிட்டது. இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு  முதல் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் இக்கோயிலுக்கு கிழக்கு பகுதியில் விநாயகரும், கோயிலின் தென்மேற்கில் மாதேஸ்வரரும், மேற்குப்பகுதியில் தெப்பக்குளம் அருகே சருகுமாரியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன.

குண்டம் திருவிழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தீக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதிகாலை 4 மணிக்கு கோயில் அர்ச்சகர் சிறப்புபூஜைகளை செய்து குண்டம் இறங்கியபின் வரிசையில் காத்திருக்கு பக்தர்கள் மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணிநேரம் குண்டம் இறங்குவர். தமிழகத்தில் உள்ள எந்த கோயிலிலும் தொடர்ந்து 12 மணிநேரம் குண்டம் இறங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அம்மை நோய் தாக்கினால் பண்ணாரிஅம்மன் கோயில் தீர்த்தம் கொண்டு சென்று தெளித்தால் நோய் குணமடைவதாகவும், மருகு உள்ளிட்ட சரும நோய்களுக்கு குண்டத்தில் உப்பு, மிளகு வாங்கி போட்டு அம்மனை வேண்டினால் நோய்கள் குணமாவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Bannari Amman ,Sathiyamangalam ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர்...