×

பிரிவது ஜெயம் ரவியின் தன்னிச்சை முடிவு; நானும் 2 மகன்களும் தவிக்கிறோம்: ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை

சென்னை: காதலித்து திருமணம் செய்து, பிறகு 2 மகன்களுக்கு தந்தையான நடிகர் ஜெயம் ரவி, பல வருட மண வாழ்க்கையை விவாகரத்து மூலம் முடித்துக்கொள்வதாக, சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று அவரது மனைவி ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை வருமாறு: சமீபத்தில் ஊடகங்களிலும். சமூக வலைத்தளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையைப் பார்த்து நான் கவலையும், மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க, முழுக்க என் கவனத்துக்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை, இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கவுரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்துவிட்டதாக நான் உணர்கிறேன். என் கணவரிடம் மனம்விட்டுப் பேச, என் கணவரைச் சந்திக்க வேண்டும் என்று நான் சமீபகாலமாக பலவிதமான முயற்சிகள் செய்தேன். ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும், என் 2 மகன்களும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க, முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர, குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கும் நிலையிலும், நான் பொதுவெளியில் இதுகுறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால், என்மீது குற்றம் சாட்டியும், என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும், பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு தாயாக எனக்கு எப்போதும் எனது மகன்களின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எனது மகன்களை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால், இவற்றை எல்லாம் மறுப்பதும் என் முதல் கடமையாகிறது.

தற்போது இந்த கடினமான காலக்கட்டத்தில் எனது மகன்களுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம், நடந்த உண்மைகளை எந்தவித பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடினமான காலத்தை நானும், எனது மகன்களும் கடந்து செல்லும்வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமின்றி, நல்வழி காட்டி வரும் பத்திரிகை, ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும், ஆதரவும் மட்டுமே என்னையும், எனது மகன்களையும் இந்த காலக்கட்டத்தில் தூணாக இருந்து காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று, உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆர்த்தி ரவி கூறியுள்ளார். ெஜயம் ரவி அவரைவிட்டுப் பிரிவதாக அறிவித்து விவாகரத்து வரை சென்றுள்ள நிலையில், ஆர்த்தி இன்னும் தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் ரவி என்ற பெயரை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிரிவது ஜெயம் ரவியின் தன்னிச்சை முடிவு; நானும் 2 மகன்களும் தவிக்கிறோம்: ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Jayam Ravi ,Aarti Ravi ,CHENNAI ,Aarti ,Aarthi Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியர் இடையே...