×

பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

சுசீந்திரம்: பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச் 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. முதல்நாள் விழாவில் அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்துக்கு பூஜைகள் செய்து மாத்தூர்மட தந்திரி சங்கரநாராயணரு கொடியேற்றினார். இரவு சுவாமி பூப்பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு சுவாமி பவனி வருதல், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் 9ம் நாளான நேற்று காலை கணபதி ஹோமம், 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.

முதல் தேரில் விநாயகர் எழுந்தருள பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட மற்றொரு தேரில் மகாவிஷ்ணு, பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. மதியம் 12 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தொடர்ந்து 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம், 9.30க்கு சுவாமி வெள்ளிக்குதிரை வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பத்தாம் திருவிழாவான இன்று(20ம் தேதி) காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், இரவு 11 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது.  விழா ஏற்பாடுகளை திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்பு மணி, கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் ஹரிபத்மநாபன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags : devotees ,
× RELATED திருப்பதிக்கு நடைபாதையில் வரும்...