×

முத்துமாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம் கோலாகலம் : பூக்குழி இறங்கி நேர்த்தி கடன்

புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசிதேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசிதேரோட்டம் பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து காலையிலும், மாலையிலும் திருவப்பூர் காட்டுமாரியம்மன் கோயிலில் எழுந்தருளி புஷ்பமின் அலங்காரத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு வீதிஉலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நாளான 9வது நாள் விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி திருவப்பூர் முத்து மாரிம்மனை திருவப்பூரில் உள்ள காட்டுமாரியம்மன் கோயிலில் எழுந்தருள செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துமாரியம்மனை எழுந்தருள செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது. தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி மற்றும் அலகு குத்திக்கொண்டும் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் மற்றும் விரதம் இருந்த பக்தர்களும் முத்துமாரியம்மன் கோயில் முன் அமைக்கப்பட்டு இருந்த பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்கள்.

Tags : Muthuramaniyan ,
× RELATED உற்பத்தி, ஏற்றுமதிக்கு அரசு நிதியுதவி...