×

உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கொடியேற்றம் : திரளானோர் பங்கேற்பு

திசையன்விளை: உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் உள்ள புகழ்வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் உவரி புனித அந்தோணியார் திருத்தலமும் ஒன்று. கடற்கரையோரம் அழகுற அமைந்துள்ள இவ்வாலய பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் திருப்பலி நடந்தது.  மாலையில் பங்கு ஆலயத்தில் இருந்து அந்தோணியார் ஆலயம் வரை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். ஊர்வலத்தில் பாரம்பரிய உடையணிந்த கொம்பீரியர் சபையினர், பல்வேறு பக்த சபையினர் மற்றும் ஊர்மக்கள் சென்றனர்.

திருத்தலம் முன்புள்ள கொடிமரத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று அர்ச்சிக்கப்பட்ட கொடியை ஆயர் இவோன் அம்புரோஸ் ஏற்றினார். அப்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மக்கள், பல்வேறு வண்ணங்களில் பலூன்களை வானில் பறக்க விட்டனர். தொடர்ந்து மக்களின் கரகோஷத்துடன் வாணவேடிக்கை நடந்தது. முன்னதாக கொடிமரத்தின் கீழ் பக்தர்கள் காணிக்கையாக நேர்ச்சை துண்டுகளை செலுத்தினர். கொடியேற்றத்தை தொடர்ந்து கோட்டார் புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தை சேர்ந்த குணபால் ஆராச்சியின் ‘புனித அந்தோணியார் இறைவல்லமையின் கருவி’ என்ற தலைப்பில்  மறையுரையும், ஆயர் தலைமையில் நற்கருணை ஆசீரும் நடந்தது.

இதில்  பங்குத்தந்தையர்கள் பன்னீர்செல்வம் (திசையன்விளை), விக்டர் சாலமோன் (பூச்சிக்காடு), ஜெகதீஸ் (சொக்கன்குடியிருப்பு), ரெமிஜியூஸ் (சாத்தான்குளம்), ரோசன் (ஆலந்தலை), டேவிட் (பெருமணல்), வென்சிகர் (ராதாபுரம்), ததேயுஸ் (செட்டிவிளை), இருதயசாமி (நாட்டார்குளம்), ஜெரோசின்(தூத்துக்குடி), வில்லியம்(முள்ளக்காடு), பிரதீபன்(தோமையார்புரம்), ஜெயந்தன் (பெரியதாழை) உட்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர். மேலும் பொன்விழா காணும் புனித சகாய அன்னை சங்கீத சபா பாமாலை அரங்கேற்றம் நடந்தது. விழாவில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 13 நாட்கள் பெருவிழா நடக்கிறது. 2ம் திருவிழாவில் இன்று காலை 6.15 மணிக்கு நடைபெறும் நவநாள் திருப்பலியை புனித வளன் நடுநிலைப்பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் சிறப்பிக்கின்றனர். இரவு 7 மணிக்கு முட்டம் மறைவட்ட முதன்மைக்குரு ஜான்ரூபசின் ‘இறையழைத்தலுக்கு செவிமடுத்த புனித அந்தோணியார்’ என்ற கருத்துடன் மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இன்று முதல் 11ம் திருவிழா பிப்.15ம் தேதி வரை தினமும் காலை 6.15 மணிக்கு திருப்பலி, மாலை பல்வேறு பங்கு மற்றும் சபைகளை சேர்ந்த குருவானவர்களின் மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.

12ம் திருவிழாவன்று இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ்  தலைமையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. மறுநாள் காலை 6.15 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி,  தொடர்ந்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக சப்பர பவனி நடக்கிறது.
விழாவை முன்னிட்டு பல்வேறு முக்கிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வள்ளியூர் ஏஎஸ்பி அரிகிரன் பிரசாத் தலைமையில் உவரி இன்ஸ்பெக்டர் சந்தி செல்வி செய்து வருகிறார். பெருவிழா ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை தோமினிக் அருள் வளன், ஷிபாகர், திருத்தொண்டர் வில்லியம், திருத்தல நிதிக்குழு மற்றும் பணிக்குழுவினர், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Uvari Anthony Paramattu ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்