×

கீழப்பாவூர் நரசிம்மர் பெருமாள் கோயில்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ளது கீழப்பாவூர். இங்குள்ள பெரிய குளத்தருகே வீற்றருந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீ அலமேல்மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ  ப்ரசன்ன வேங்கடாசலபதி மற்றும் ஸ்ரீ 16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நரசிங்க பெருமாள். மிகவும் வரலாற்று சிறப்புமிக்க இக்கோயில் 1100 வருடங்கள் பழமையானது. கோயிலின் முன்புறம் வேங்கடாசலபதியும் பின்புற சன்னதியில் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிங்க பெருமாளும் காட்சியருளுகின்றனர். கோயிலின் அருகிலேயே புதுப்பிக்கப்பட்ட தடாகம் (திருக்குளம்) அமைந்துள்ளது. இது கங்கா நர்மதா சம்யுக்த ஸ்ரீ நரசிம்புஷ்கரணியாக அழைக்கப்படுகிறது. இந்த வெங்கடாசலபதி முனையெதிர் மோகர், மோகராழ்வர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பல மன்னர்கள் இக்கோயில் சிறப்பு பெற ஆன்மீக சேவை செய்துள்ளதாக கல்வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சோழர், பாண்டியர் ஆட்சிக்கும் இந்த ஊர் உட்பட்டிருந்ததும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. சுவாதி மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் வழிபாடு மற்றும் சூரிய உதயநாழிகையின் அடிப்படையில் சிறப்பு ஆராதனை நடக்கிறது. வேண்டியதை உடனே அருளும் 16 திருக்கர நரசிம்மர் மிகவும் சிறப்பு பெற்றவர். இதற்காக நரசிம்மரை வேண்டி அர்ச்சித்து பக்தர்கள் 16 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இங்கு வழிபட வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகமாக உள்ளது.

பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நெல்லையில் இருந்து பாவூர்சத்திரம் சென்று அங்கிருந்து டவுன் பஸ்களிலோ அல்லது ஆட்டோவிலோ செல்லலாம். ஆட்டோ கட்டணமாக சுமார் 50 ரூபாயும், பஸ்சிற்கு சுமார் 7 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அடிபம்பு பஸ் ஸ்டாப்பில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்றால் கோயிலை அடையலாம். தினமும் காலை 8 மணி  முதல் 11.45 மணி வரையும்,  மாலையில் 5 மணி முதல் 7.45 மணி வரையும் நடை திறந்திருக்கும். விழாக்காலங்களிலும், மார்கழி மாதத்திலும் பூஜை  நேரம் மாறும். தமிழக அரசின் ஒரு கால பூஜை திட்டத்தில் இக்கோயிலில் பூஜைகள் நடக்கின்றன.

Tags : Kelappavur Narasimha Perumal Temple ,
× RELATED திருக்குறுங்குடி அழகிய நம்பி ராயர் பெருமாள் ஆலயம்