×

தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை, புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: நான் நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடி ஊரைச் சேர்ந்தவர். அங்கு 10ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படித்தேன். 11 மற்றும் 12ம் வகுப்பு தன் ஊரில் இல்லாததால்  அருகிலுள்ள கேரளாவில் உள்ள பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் படித்தேன். பின்னர் குரூப் 2 தேர்வு எழுதி, தமிழ் வழியில் படித்ததிற்கான இட ஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். மேலும், சிறந்த பணி வாய்ப்பை பெறுவதற்காக கடந்த 2021ம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதினேன். அப்போது தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, தமிழக அரசின் புதிய சட்டதிருத்த தத்தின் அடிப்படையில் அனைத்து வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்ததற்கான சான்றிதழை கேட்கின்றனர். அரசின் இந்த சட்டத்திருத்தம் எனது அடிப்படை உரிமையை பாதிக்கிறது. புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும். அந்த சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதிகள்  டி.ராஜா மற்றும் கே.குமரேஷ்பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி,  பணிக்கு தகுதி உடைய படிப்பு படிக்கும் வரை, அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் தான் படித்திருக்க வேண்டும், அப்போதுதான் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று தெரிவித்தார். மேலும் ஏற்கனவே இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துள்ளதாக  சுட்டிக்காட்டினார். இதையடுத்து சட்டத் திருத்தத்திற்கு எதிராக ஷாலினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்….

The post தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai, ,PTI ,Shalini ,Chennai, Chennai ,
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லையால்,...