×

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் 508 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்

பெரம்பலூர்: வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் 508 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் வாலீஸ்வரர் கோயில் உள்ளது. கிபி 10ம் நூற்றாண்டில் பராந்தகச்சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் இந்துசமய அறநிலையத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயில் முன் விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட மண்டபம் சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

இக்கோயில் ராமயண காலத்தில் வாலி, சிவனை வழிபட்ட ஸ்தலமாகவும், இவ்வூர் வாலியை ராமன் மறைந்திருந்து கொன்ற இடமாகவும் கருதப்படுகிறது.
இந்த கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவனுக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. நேற்று மாலை 5.30 மணிக்கு ஜெயச்சந்திர சிவாச்சாரியார் தலைமையில் நடந்த பூஜையில் 508 கிலோ அரிசியை சமைத்து படையலிட்டு சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் வாலிகண்டபுரம் மட்டுமன்றி பிரம்மதேசம், சாலை, வல்லாபுரம், தேவையூர், மேட்டுப்பாளையம், சாத்தனவாடி, பாத்திமாபுரம், சிறுகுடல், தண்ணீர்பந்தல், பெரம்பலூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Annapishekam ,
× RELATED ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்