×

100 நாள் வேலை தராததால் கிராம மக்கள் சாலை மறியல்

ஸ்ரீபெரும்புதூர்:கோட்டூர் ஊராட்சியில் 100 நாள் வேலை தராததால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், கோட்டூர் ஊராட்சியை சேர்ந்த சிலருக்கும் மட்டும் தொடர்ந்து 100 நாள் வேலை பணி வழங்கப்பட்டு வந்துள்ளது. இதில் விடுபட்ட 80க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வேலை வழங்கப் படவில்லை என கூறப்படுகிறது. வேலை வழங்குவது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் முருகையன், ஊராட்சி செயலர் மற்றும் அதிகாரிகள் பலரிடமும் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று எடையார்பாக்கம்-சுங்குவார்சத்திரம் சாலையில் அமர்ந்து வேலை வழங்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பவானி உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பெண்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post 100 நாள் வேலை தராததால் கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Sriperuduthur ,Kottur curraksha ,Sriperudur Union Kottur ,Dinakaran ,
× RELATED எலி பேஸ்ட் சாப்பிட்ட 4 குழந்தைகள் அட்மிட்