×

அரண்மனை 4 – திரை விமர்சனம்

குஷ்பு தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி இசையில், தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து அரண்மனை பட பாகங்களின் 4ம் பாகமாக வெளியாகியிருக்கிறது ‘அரண்மனை 4‘.

வக்கீல் சரவணனின்(சுந்தர் சி) தங்கை செல்வி (தமன்னா) தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வருகிறது . காதல் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்ட தங்கையின் மரணச் செய்தியால் அந்தக் கிராமத்திற்கு தன் அத்தையுடன் (கோவை சரளா) வருகிறார் சரவணன். அங்கே அம்மா, அப்பா இருவரும் இல்லாமல் தங்கையின் குழந்தைகள் பழைய அரண்மனையில் ஆபத்தில் உள்ளனர்.

அதில் மூத்த மகள் கோமாவில் இருக்க அவரை பார்த்துக்கொள்ளும் ஹோம் மருத்துவராக டாக்டர் மாயா (ராஷி கண்ணா). வீட்டு மாராமத்து வேலைகள் பார்க்கும் மேஸ்த்ரி (யோகி பாபு) மற்றும் கார் பெண்டர் (விடிவி கணேஷ்) சகிதமாக இருக்கும் அரண்மனையில் அமானுஷ்ய சம்பவங்கள், உருவங்கள் என பயமுறுத்கினறன. இடையில் கிராமத்திலும் நிகழும் மர்மமான மரணங்கள் ஏன் இதனால் நிகழ்கின்றன. பிரச்னை சரியானதா இல்லையா என்பது மீதிக் கதை.

சுந்தர் சியின் அரண்மனை முந்தைய பாகங்களில் இருந்து இந்தப் படம் நிறைய வேறு படுகின்றன. குறிப்பாக பழி வாங்கும் பேய் இல்லை என்பதற்கே பாராட்டுகள். மேலும் டெம்ப்ளேட் விஷயங்களான பளிச் பங்களா, கிளாமர் ததும்பும் நாயகிகள், படம் நெடுக பாடல்கள், காதல் அலப்பறைகள், என இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு கொஞ்சம் சீரியஸாக கதை சொல்ல முயற்சித்திருக்கிறார். பாக் என அழைக்கப்படும் துஷ்ட சக்திக்கு இன்னும் விளக்கமான கதை கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

மேக்கப் இல்லாமல் இயற்கையான இயல்பான சருமத்துடன் தமன்னா இரண்டு குழந்தைங்களுக்கு அம்மாவாக மொத்த கதைக்கும் முதன்மையாக நிற்கிறார். அடுத்து ராஷி கண்ணா எங்கே அவருக்கும் சுந்தர் சிக்கும் இடையில் காதல், டூயட் என கதை சென்று விடுமோ என நாம் நினைப்பதற்குள் ராஷி கண்ணாவின் வேலை அதுவல்ல என குழந்தைகளுக்கும் வீட்டிற்கும் கார்டியன் ஏஞ்சலாக காண்பித்து தேவையற்ற கதையின் போக்கை திசை திருப்பும் காட்சிகளை குறைத்திருக்கிறார். ராசி கண்ணாவும் அளவான காட்சிகள் வந்தாலும் தனக்கான வேலையை சரியாக செய்திருக்கிறார். யோகி பாபு, வீடிவி கணேஷ், கோவை சரளா கூட்டணியில் பல இடங்களில் கலகலப்பு உச்சம் தொடுகிறது.

ஜெயபிரகாஷ், சிங்கம்புலி, ராம், மொட்டை ராஜேந்திரன், என படம் முழுக்க நடிகர்கள் பட்டாளம் இருப்பினும் அளவான பயன்பாடு. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் அமானுஷ்யம் நிறைந்த கிராமமும் பழமையான பங்களாவும் பல இடங்களில் திகில் தருணங்கள் கொடுக்கின்றன. அதற்கு இணையாக ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசையும் பல இடங்களில் சீட்டு நுனிக்கு இழுத்து வருகிறது. ஜோ ஜோ பாடல் தாலாட்டு எனில் அச்சச்சோ பாடல் ரிப்பீட் ரகம். கிராஃபிக் காட்சிகள் ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களை ஞாபகப்படுத்துகின்றன அதை குறைத்திருக்கலாம். பென்னி ஆலிவர் எடிட்டிங் பின்பாதி படத்தை மிகவும் விறுவிறுப்பாக முடித்து இருக்கிறது.

நாங்கள் கான்ஜுரிங் ரசிகர் எனில் இந்தப் படம் உங்களுக்கல்ல. மொத்தத்தில் முந்தைய மூன்று பாகங்கள் நாங்கள் குடும்பத்துடன் ரசித்தோம் எனில் இந்த நான்காவது பாகமும் சில மாற்றங்கள் மற்றும் டெம்ப்லேட் காட்சிகள் அல்லாமல் உங்களை உற்சாகப்படுத்தும்.

The post அரண்மனை 4 – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Khushbu ,Sundar C ,Tamannaah ,Rashi Khanna ,Santhosh Pratap ,Gowai Sarala ,Yogi Babu ,VTV Ganesh ,Mottai Rajendran ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமிழ், தெலுங்கில் வெளியாகும் லெவன்