×

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கி 19ம் தேதி வரை நடக்கிறது. இன்று(10ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 9.15 மணிக்கு அம்மன் கொலு மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு அபிஷேகம், மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு ஆன்மிக உரை, இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் அம்மன் வாகனத்தில் பவனி வருதல், அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள், அன்னதானம், ஆன்மிக உரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 19ம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மதியம் 12.15 மணிக்கு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது அம்மனுக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெறுகிறது.

பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பக்தர்கள் சங்கம் சார்பில் ஊர்வலத்தில் யானைகள், குதிரைகள், கும்பாட்டம், போன்ற மேள, தாளம் முழங்க அம்மன் மகாதானபுரம் சந்திப்பு நோக்கி ஊர்வலமாக புறப்படுவார். மாலை 6.30 மணிக்கு மகாதானபுரம் சந்திப்பில் அமைந்துள்ள காரியக்காரமடத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து நரிக்குளம் அருகே பணாசுரன் என்ற அரக்கனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்சி நடக்கிறது. அதன் பிறகு அம்மன் பல்லக்கு வாகனத்தில் பஞ்சலிங்கபுரம், மகாதானபுரம் வழியாக கோயிலை சென்றடைந்ததும் முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அம்மன் கிழக்குவாசல் வழியாக கோயிலுக்குள் செல்வார். விழா ஏற்பாடுகளை திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோயில் மேலாளர் சிவராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

Tags : Navarathri Festival ,Kanyakumari Bhagavathy ,
× RELATED கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் அன்னதான உண்டியலில் ₹69 ஆயிரம் காணிக்கை