×

கேரளாவில் கலவரத்தை தூண்ட சதி; தங்கராணி சொப்னா, முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள அரசியலில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தங்கக் கடத்தல் வழக்கு இப்போது மீண்டும் சூடுபிடித்து உள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றச்சாட்டுக்கு ஆளான சொப்னா, நீதிமன்றத்தில் தொடர்ந்து 2 நாள் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் பிறகு முதல்வர் பினராயி விஜயன் சூட்கேசில் துபாய்க்கு கட்டுக்கட்டாக பணத்தை கடத்தினார் என்றும், அமீரக துணைத் தூதர் தங்கி இருந்தபோது அவரது வீட்டில் இருந்து பெரிய, பெரிய பிரியாணி பாத்திரங்களில் வீட்டுக்கு தங்கம் உள்பட பல பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது என்றும் கூறினார். மேலும், முதல்வர் பினராயி விஜயனின் மனைவி கமலா, மகள் வீணா, ஐஏஎஸ் அதிகாரிகளான சிவசங்கர், நளினி நெட்டோ, பினராயி விஜயனின் உதவியாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்து இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சொப்னா புகார் கூறிய முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஜலீல் நேற்று திடீரென திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: சொப்னாவும், முன்னாள் எம்எல்ஏவான பி.சி. ஜார்ஜும் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி முதல்வர் உள்பட முக்கிய நபர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளனர். இதன்மூலம் அவர்கள் கேரளாவில் கலவரத்தைத் தூண்ட திட்டமிட்டு உள்ளனர். எனவே 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து சொப்னா, முன்னாள் எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் ஆகியோர் மீது இபிகோ 120 பி, 153 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கேரள முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான பி.சி ஜார்ஜ் கூறியது: அனைத்து விவரங்களையும் சொப்னா என்னிடம் கையெழுத்து போட்டு எழுதிக் கொடுத்து உள்ளார். சொப்னா கூறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும். ஆகவே பினராயி விஜயன் உடனே பதவி விலகுவது தான் நல்லது என்றார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறி சொப்னா எர்ணாகுளம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது….

The post கேரளாவில் கலவரத்தை தூண்ட சதி; தங்கராணி சொப்னா, முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Tangarani Sobna ,MLA ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை