×

அல்லல் களைவாள் கன்னிகா பரமேஸ்வரி!

ஆந்திராவின் கடப்பா ஜில்லாவில் கடப்பாவிலிருந்து 51 வது கிலோ மீட்டரில் ப்ரோடாட்டூர் என்றொரு நகரம் உள்ளது. இதனை இரண்டாவது மும்பை என அழைக்கின்றனர். ஏன் மும்பை போன்ற இங்கும் தங்கம் மற்றும் துணி வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இந்த ஊரில் உள்ள சின்னச் சின்ன நகைக் கடைகளில் கூட ஏராளமான வடிவமைப்புகளில் தங்க நகைகளும், தங்கக் கட்டிகளையும் காணலாம். நெய்யினால் செய்த ‘தங்கடுபல்லே’ என்ற ஸ்வீட் இங்கு பிரபலம்.
இவற்றையெல்லாம் விட இங்குள்ள கன்னிகாபரமேஸ்வரி கோயிலும், ஸ்ரீ ராமேஸ்வரர் கோயிலும் மிக மிக பிரபலமாகும். இலங்கையில் ராவணனை வதம் செய்து விட்டு, அயோத்தியா திரும்பும் வழியில் சீதையுடன் இங்கு வந்த ராமன், சூரியன் மறைந்து விட்டதால் இனி மேலும் பயணிக்க இயலாது என சீதையிடம் ஒரு இடம் பார்க்கச் சொன்னான். ராமனிடம் ஒரு சிறப்பு.

எங்கு சென்றாலும் அங்குள்ள மண்ணைக் கொண்டு ஒரு லிங்கத்தை பிடித்து வைத்து அதற்கு பூஜித்து விட்டுதான் இரவு உணவு. அடுத்த நாள் தொடர்ந்து பயணம் செய்தல் ஆகியவையெல்லாம்! சூரிய அஸ்தமனத்திற்கு தெலுங்கில் ‘பரோட்’ (டாட்டூர்) என்று பெயர். அதுவே காலத்தால் ப்ரோடாட்டூர் என மாறிவிட்டது. அஸ்தமன ஊர் எனவும் கொள்ளலாம். ராமர் அன்று இரவு பென்னா நதிக் கரையில் தங்கினார். அவர் பிடித்து வைத்த சிவன் இன்று ராமேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகின்றது. காசிக்குச் செல்லும் ஆந்திரர்கள் தங்கள் பயணத்தை நிறைவு செய்ய இங்குள்ள ராமேஸ்வரர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். காசியிலிருந்து நீர் எடுத்து வந்து, ராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதனால் இந்த ஊருக்கு தட்சிண காசி என்றொரு பெயரும் உண்டு. கோயில் ஊரின் தென் பகுதியில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் விழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கும் அற்புதக் கோயில்!

இந்த ஊரின் மற்றொரு விசேஷம். கன்னிகா பரமேஸ்வரி கோயில். இந்தியாவிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயில்களில் மிகவும் பெரியது. இந்தக் கோயிலை அம்மாவாரி சாலா என அழைக்கின்றனர். ஆரிய வைசியர்களை வாழவைக்கும் அம்மா வசிக்கும் இடம் எனப் பொருள். ஸ்ரீ காமி செட்டிகொண்டைய்யா எனும் பக்தர் கனவில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தோன்றி தனக்கொரு கோயில் கட்டும்படிக் கோரினாள்! அதன்படி 1890ல் இந்தக் கோயில் கட்டப்பட்டது. இதன் உயரமான கோபுரம் பூமியிலிருந்து பத்தடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஊருக்கு வரும் மக்கள் இதனை தூரத்திலிருந்தே கண்டு களிக்க முடியும்.  பார்வதியின் ஒரு அம்சம்தான் கன்னிகா பரமேஸ்வரி. இது பென்னா (பழைய பெயர் பினாகினி) நதிக்கரையில் அமைந்துள்ளது. இதேமாதிரி மற்றொரு கன்னிகா பரமேஸ்வரி கோயில், பெனுகோண்டாவில், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊர் மேற்கு கோதாவரி ஜில்லாவில் உள்ளது.

ஆனால், ப்ரோடாட்டூர் கன்னிகா பரமேஸ்வரியை சரணடைந்தவர்கள் எந்த கஷ்டத்தில் இருந்தாலும் புது வாழ்வு பெறுவர் என பலமாக நம்பப்படுகிறது. முழுமையான நம்பிக்கையுடன் வணங்குவோருக்கு முக்தி நிச்சயம். அம்மனின் சந்நதிக்கு முன்பு ஒரு நாலு கால் மண்டபம் உண்டு. சண்டை, தகராறுகள், பிரச்னைகள் எழுந்தால் சம்பந்தப்பட்டவரை இந்த நாலுகால் மண்டபத்தின் நடுவே உட்கார வைத்தால் மனம் மாறி விடுவார் என நம்பப்படுகிறது. அம்மனின் அபிஷேக நீருக்கு வியாதிகளை குணப்படுத்தும் சக்தியும் உண்டு. கன்னிகா பரமேஸ்வரியுடன் வலப்புறம் பிள்ளையாரும், தென்புறம் வீரபத்திரரும் சந்நதி கொண்டுள்ளனர். இரண்டாவது வாயிலில் நாகரேஸ்வர ஸ்வாமி உள்ளார். இவரும் ஆர்ய வைசியர்களின் விசேஷ தெய்வமாவார். கன்னிகா பரமேஸ்வரியின் காலில் சூரியனின் கதிர்கள் காலையில் தினமும் விழுவது கண் கொள்ளக் காட்சி! இந்தக் கோயிலில் நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரங்களில் அம்மன் ஜொலிக்கிறார். விஜயதசமியன்று விசேஷ வழிபாடு நடக்கிறது. இதில் ஏராளமானோர் பங்கு கொள்கின்றனர். அன்று ஊரே அமர்க்களப்படுகிறது.
 
ராஜிராதா

Tags : Kannika Parameshwari ,
× RELATED கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்