×

16 ஆயிரம் கன அடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பென்னாகரம் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியில் வரும் நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தடை விதித்துள்ளார்.கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நேற்று முன்தினம் ஒகேனக்கல்லில் விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8 மணி 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்க தொடங்கியது. இதனால், ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக -கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், போலீசார் காவிரி கரையோரப் பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தடை விதித்துள்ளார். இதனால், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவு வாயிலை பூட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்….

The post 16 ஆயிரம் கன அடியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Ogenacal ,Bennakaram ,Ogenakal ,Kaviri ,Dinakaran ,
× RELATED யாசகமல்ல.. உரிமை