×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ.10 டெபாசிட் திட்டம்

கூடுவாஞ்சேரி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலுக்கு ரூ.10 டெபாசிட் செலுத்தி, அவற்றை ஒப்படைத்தால் பணம் திருப்பி தரும் திட்டம் துவங்கப்பட்டது. வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள வனவிலங்குகள் மற்றும் பறவையினங்களை பார்ப்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இவர்கள் பூங்காவினுள் உணவு கழிவுகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே போட்டுவிட்டு செல்கின்றனர். ஒருசிலர் குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் இருக்கும் கூண்டுகளில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அபராதம் விதித்தும் பிளாஸ்டிக் கழிவுகளின் தேக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பூங்காவுக்குள் பார்வையாளர்களால் கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் மற்றும் அங்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி, திரும்பப் பெறும் டெபாசிட்டாக ரூ.10 பெறப்படுகிறது.  பின்னர் பார்வையாளர்கள் பூங்காவை சுற்றி பார்த்து திரும்பும்போது, ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்களை சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களில் கொடுத்து ரூ.10 டெபாசிட்டை திரும்பப் பெறும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதனால் காலி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கண்டபடி தூக்கி எறிந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல் தடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும், இந்த ஆண்டு ஒரே ஒரு பூமி எனும் கருப்பொருளில் அனைத்து ஊழியர்களையும் ஒருங்கிணைத்து ஒரு நபர், ஒரு மரம் என்ற முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் அந்த மரக்கன்றுகளை வளர்க்க ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும், பூங்காவில் இருக்கும் நீர் தொட்டிகளில் மீன் வளர்ப்பு முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் அங்குள்ள நீர் பறவைகள், முதலைகளின் அன்றாட மீன் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ.10 டெபாசிட் திட்டம் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Kooduvancheri ,World Environment Day ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை