×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் நேற்று பராமரிப்பு பணியில் இருந்த ஊழியரை ஒரு முதலை சரமாரி கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த வாலிபரை சக ஊழியர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்பட பல்வேறு அரிய வகை வனவிலங்குகளும் ஏராளமான பறவை மற்றும் முதலை போன்ற நீர்வாழ் உயிரினங்களும் உள்ளன. இவற்றை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து ரசித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா குடியிருப்பில் தங்கி, கடந்த 5 வருடங்களாக தற்காலிக பராமரிப்பு ஊழியராக வேலைபார்ப்பவர் விஜய் (23). இதேபோல், விஜய்யின் தந்தை ஏசுவும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நெருப்புக்கோழி பராமரிப்பாளராக நிரந்தர பணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று வழக்கம் போல் சதுப்புநீர் முதலை பண்ணையில் விஜய் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது நீருக்குள் இருந்த ஒரு முதலை, திடீரென விஜய்யின் காலை கவ்வி பிடித்து, சரமாரி கடித்து குதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஊழியர்கள் ஓடிவந்து, முதலையின் வாயிலிருந்து விஜய்யின் படுகாயம் அடைந்த காலை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை சக ஊழியர்கள், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

 

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Kuduvanchery ,Vandalur, Chennai ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்: நிர்வாகம் அறிவிப்பு