லால்குடி: லால்குடி அருகே அரியூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். லால்குடி அருகே அரியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வரதராஜ பெருமாள் திருக்கல்யாண மஹோத்சவம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டால் திருமணமாக ஆண் பெண்களுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இதனை தொடர்ந்து நேற்று காலை விருச்சிக லக்னத்தில் திருக்கல்யாண மஹோத்சவம் நடந்தது.
இதனையொட்டி, கோயில் மூலவர் லெட்சுமிநாராயண பெருமாள் தேவி பூதேவிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மாப்பிள்ளை அழைப்புடன் சீர்வரிசை எடுத்தல், எஜமான சங்கல்ப்பம், முளைப்பாறி இடுதல், மாலை மாற்றுதல், கன்னிகாதானம் நடந்தது. இதனை தொடர்ந்து, திருக்கல்யாணம். மாப்பிள்ளை தாரணம், தீபாராதனை நடத்தப்பட்டது.
திருக்கல்யாணத்தில் அரியூர், அன்பில், செங்கரையூர், களத்தில்வென்றார்பேட்டை, திண்ணியம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். திருமணம் ஆகாத ஆண்கள் பெண்கள் இரு மாலையோடு வந்து திருமண பிரார்த்தனை செய்துகொண்டு சுவாமிக்கு திருக்கல்யாணத்தில் அணிவித்த மாலையை தாங்கள் பெற்றுக்கொண்டு சென்றனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருமண விருந்து நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் குருக்கள் கிராம மக்கள் செய்திருந்தனர்.
