×

‘அன்னபூரணி’ பட சர்ச்சை இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டார் நயன்தாரா

சென்னை: நடிகை நயன்தாராவின் படம் ‘அன்னபூரணி’. ஜெய், சத்யராஜ் உள்பட பலர் நடித்த இந்த படம் கடந்த டிச. 1ம் தேதி வெளியானது. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியானது. இந்த படத்தில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஃபர்ஜான் என்ற கதாபாத்திரம், கதாநாயகியை இறைச்சி சாப்பிட வைப்பதற்காக ராமர் இறைச்சி சாப்பிடுவார் என்று கூறுவது போலவும் அர்ச்சகர் மகளான கதாநாயகி ‘நமாஸ்’ செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வேண்டும் என்றே படம் எடுக்கப்பட்டுள்ளது என்று இந்து அமைப்புகள் மும்பை, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். நெட்பிளிக்சிலிருந்து படம் நீக்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா வெளியிட்ட அறிக்கை: ‘அன்னபூரணி’ திரைப்படத்தால் நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது.

நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன். அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

The post ‘அன்னபூரணி’ பட சர்ச்சை இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கேட்டார் நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nayanthara ,Chennai ,Jai ,Sathyaraj ,Nilesh Krishna ,Netflix ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நயன்தாரா தயாரித்த ‘கூழாங்கல்’ படத்துக்கு விருது