×

ஞானவேல்ராஜாவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதிலடி

சென்னை: இயக்குநர் அமீர் குறித்து பேசியதற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நடிகர் சமுத்திரக்கனி அதற்கு பதிலளித்துள்ளார். 2007ம் ஆண்டு ‘பருத்தி வீரன்’ படம் திரைக்கு வந்தது. இந்த படத்தை தனது பட நிறுவனம் சார்பில் இயக்குநர் அமீர் தயாரிக்க ஆரம்பித்தார். இடையில் படத்தின் பட்ஜெட் காரணமாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டார். அப்போது குறிப்பிட்ட தொகை பேசப்பட்டு முறைப்படி படத்தை ஞானவேல்ராஜா வாங்கிவிட்டதாக ஒரு தரப்பு சொல்கிறது. ஆனால் அதுபோல் ஞானவேல்ராஜா வாங்கவில்லை.

அமீருடன் சேர்ந்து அவர் பாதி படத்தை தயாரித்தார் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. இந்நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஞானவேல்ராஜா, ‘நான் பருத்தி வீரன் தயாரித்து வந்தபோது, அமீர் ஏகப்பட்ட செலவுகளை வைத்துவிட்டார். பொய் கணக்குகள் காட்டி பணத்தை அவர் சுருட்டினார்’ என்றெல்லாம் புகார் கூறினார். இந்த படத்துக்கு ₹2 கோடியே 70 லட்சம் பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் ₹4 கோடியே 80 லட்சமாக பட்ஜெட்டை அமீர் இழுத்துவிட்டார் என்றும் ஞானவேல்ராஜா தெரிவித்தார். இதை உடனடியாக அமீர் மறுத்தார். இது தொடர்பாக அவர் அறிக்கையும் விட்டார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, சுதா கொங்கரா, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் குரல் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அமீர், ஞானவேல்ராஜா மோதல் விவகாரம் சூடு பிடித்து வந்தது. அமீருக்கு ஆதரவாக சிலரும் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக சிலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை கூறி வந்தனர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் ஞானவேல்ராஜா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பருத்தி வீரன் பட பிரச்னை பற்றி நான் இதுவரை வாய் திறக்காமல் இருந்தேன். என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன் நான். நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு மனப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றார். இந்நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் சமுத்திரக்கனி; பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கின்ற சீனெல்லாம் இங்கு செல்லாது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த கேவலமான இண்டெர்வியூவை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைத்து எறியவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் அவர் கூறியிருந்ததாவது, ‘எந்த பொதுவெளியில் எகத்தாளமாக உட்கார்ந்து கொண்டு, அருவெறுப்பான சேரை வாரிஅடித்தீர்களோ , அதே பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்று கூறியிருந்தார். மேலும், ‘பருத்திவீரன் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் சம்பள பாக்கி இருக்கிறது, பாவம் அவர்கள் எல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் உங்களை போல அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஞானவேல்ராஜாவுக்கு நடிகர் சமுத்திரக்கனி பதிலடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Samuthirakani ,Chennai ,Gnanavel Raja ,Aamir ,Gnanavelraja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஒவ்வொரு வீட்டிலும் சிங்கப்பெண் இருப்பார்: ஷில்பா மஞ்சுநாத்