×

கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பணத்தில் இருந்து ஊதியத்தை பெறும் அதிகாரிகள், அச்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி 2022ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரு கோவில்களுக்கு சொந்தமான நிலத்திலிருந்து 198 கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்கள் திருடப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கோவில் சொத்துக்களில் கனிம வள திருட்டு குறித்தும், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் ஜூலை 26ம் தேதி விரிவான அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி சேலம் டி.ஐ.ஜி.க்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சேலம் சரக டி ஐ ஜி அதிகாரிகளுடன் ஆஜராகி இருந்தார். அதேபோல வருவாய்த்துறை கனிமவளத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளும் ஆஜராகி இருந்தனர்.

கனிம வள கொள்ளையை தடுக்க காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு வருவாய் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று காவல்துறை தரப்பில் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மக்கள் பணத்தில் இருந்து கண்ணியமான ஊதியத்தை பெறும் அதிகாரிகள், அச்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, டி ஏ ஜி தாக்கல் செய்த அறிக்கை போதுமானது அல்ல என தெரிவித்தார். இரு மாவட்டங்களிலும் கனிம வளங்கள் எடுக்க வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விபரங்களை சேலம் சரக டிஐஜி மற்றும் கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என கனிமவளத்துறை உதவி இயக்குனருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த விவரங்களின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து சட்ட விரோத குவாரி நடவடிக்கைகளை கண்டறிந்தால், அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோத கனிம வள கொள்ளையை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதி, இது சம்பந்தமாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சட்டவிரோத கனிம வள கொள்ளை காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பை மதிப்பீடு செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை கனிமவளத்துறை உதவி இயக்குனர் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, முறையாக விசாரணை நடத்தாமல் முடிக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பின்னர், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

The post கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Eicourt ,Chennai ,Chennai ICourt ,
× RELATED ஆதார் விவரங்களை கேட்டு சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு தொந்தரவு!!