×

செவ்வாய்கிழமை விமர்சனம்

தெலுங்கில் தயாராகி தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி இருக்கும் படம் செவ்வாய்க்கிழமை. லட்சுமிபுரம் என்ற கிராமத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சுவரில், ஊரில் உள்ள ஒரு ஜோடியின் கள்ள உறவு பற்றி எழுதி வைக்கப்படுகிறது. அன்றையே தினமே அவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அடுத்த செவ்வாய்க்கிழமை பலியாகப்போவது யாரோ என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கிறார்கள். அது தற்கொலைகள் அல்ல, திட்டமிட்ட கொலைகள் என்று அதை கண்டுபிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி நந்திதா ஸ்வேதா. அவர் கண்டுபிடித்தாரா, தொடர் கொலைகள் தடுக்கப்பட்டதா என்பது கதை. இந்த கதைக்கு பின்னால் இருப்பது நாயகி பாயல் ராஜ்புத்தின் பிளாஷ்பேக்.

நிம்போமேனியா என்று அழைக்கப்படும் அதீத பாலுணர்வு பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு அதனை மிக நுணுக்கமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி. இந்த பிரச்னை உள்ளவர்களை நோயாளிகளாகத்தான் பார்க்க வேண்டும் என்ற கருத்தையும் முன் வைத்திருக்கிறார். பாதிக்கப்படும் ஒரு பெண் படும் அவஸ்தை, அதை சமூகம் எதிர்கொள்ளும் முறை, அதற்குள் ஒரு காதல், ஒரு பழிவாங்கல் என கலந்து இரண்டரை மணி நேர பொழுதுபோக்கு படமாக தந்திருக்கிறார்கள். அதற்கு ‘காந்தாரா’ படத்தின் பாணியில் ஒரு ஆன்மிக கலரும் பூசி இருக்கிறார்கள்.

மொத்த படத்தையும் தாங்கி நிற்பவர் பாயல் ராஜ்புத். இப்படி ஒரு பிரச்னை உள்ள பெண்ணாக நடிக்க துணிந்ததற்கே அவரை பாராட்டலாம். நடிப்பிலும் பிரமாதப்படுத்துகிறார். அஜ்மல் அவரை காதலித்து ஏமாற்றுகிறவராக நடித்திருக்கிறார். ஸ்ரீதேஜ் ஊர் பண்ணையாராக வருகிறார். வழக்கமாக வில்லன் கேரக்டரில் நடிக்கும் அஜய் கோஸ் இதில் காமெடி செய்திருக்கிறார்.

அஜனேஷ் கோஷின் பின்னணி இசையும், தாசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகிறது. இரண்டு கொலை நடந்திருக்கும்போது ஊருக்குள் வரும் போலீஸ் அதிகாரி ஊர் தலைவர் பேச்சை கேட்டு எந்த விசாரணையும் செய்யாமல் திரும்பி செல்கிறார். கிளைமாக்சில் திடீர் திருப்பம் வேண்டும் என்பதற்காக பண்ணையார் மனைவியும், பாயல் ராஜ்புத்தின் பள்ளி பருவ நண்பனும் வலிந்து திணிக்கப்படுகிறார்கள். இது மாதிரியான மெகா சைஸ் லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க இருக்கிறது.

The post செவ்வாய்கிழமை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Lakshmipuram ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாம்பாட்டம் விமர்சனம்