×

மலையை அடைந்தார் அழகர்: சித்திரை திருவிழா இன்றுடன் நிறைவு

மதுரை: வைகையாற்றில் இறங்க மதுரை வந்த அழகர், நேற்று மீண்டும் மலையை அடைந்தார். இன்று உற்சவ சாந்தியுடன் அழகர்கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் கடந்த 16ம் தேதி நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு கள்ளழகர் கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி மதுரை நகரில் விடிய, விடிய பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு தல்லாகுளத்தில் இருந்து பெருமாள் கோயில் சென்றார். ஒவ்வொரு மண்டகப்படியாகச் சென்று பக்தர்களுக்கு காட்சியளித்து விட்டு, மீண்டும் மலையை நோக்கி புறப்பட்டார். காலை 9 மணிக்கு அம்பலக்காரர் மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர் 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, புதூர், மூன்றுமாவடி வழியாக சென்று, நேற்று அதிகாலை 3 மணிக்கு அப்பன்திருப்பதி சென்றடைந்தார். பக்தர்கள் திரளாக காத்திருந்து தரிசனம் செய்தனர். காலை 4 மணிக்கு அப்பன்திருப்பதியில் புறப்பட்ட அழகர் 7 மணிக்கு கள்ளந்திரியை அடைந்தார். அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை தரிசித்தனர். தொடர் மண்டகப்படிகளில் காட்சி தந்த அவர், பகல் 11.40 மணிக்கு மேளதாளம் முழங்க அழகர் மலைக்கு வந்து சேர்ந்தார். பக்தர்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி திருஷ்டி சுற்றி, கோயில் வளாகத்திற்குள் அவரை அழைத்து சென்றனர்.இன்று காலை உற்சவ சாந்தியுடன் மதுரையின் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது. அழகரை கோயில் துணை கமிஷனர் அனிதா தலைமையில் பணியாளர்கள் வரவேற்றனர். நிகழ்ச்சியில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், டிஐஜி பொன்னி, எஸ்பி பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மதுரை மகுட விழா…சித்திரைப் பெருவிழா! : ஆழ்மனதில் அழகர்…சைவத்துடன் வைணவத்தை ஐக்கியப்படுத்தும் அற்புதப் பெருவிழா சித்திரைத் திருவிழா. மீனாட்சியம்மன் கோயிலின் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, அழகர் பெருமாளும் மதுரை வந்து மலைக்கு திரும்பி விட்டார். மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தந்து, கோயிலுக்கு தங்கப்பல்லக்கில் திரும்பிய அழகருக்கு இங்கு 18ம் படி கருப்பணசாமி கோயில் முன்பு சிறப்பு பூஜைகளுடன் வையாழி எனும் ஆனந்தக் கூத்தாடி, தீபாராதனை செய்து பக்தர்கள் குதூகலம் கொண்டனர். அதிர்வேட்டு முழங்க, வாண வேடிக்கைகள், மேளதாளங்களுடன் தீவட்டி பரிவாரங்கள் முன் செல்ல அழகருக்கு பூசணிக்காய்களில் கற்பூரம் ஏற்றி திருஷ்டியும் சுற்றப்பட்டு விட்டது.மலைவளம், சோலைவளம், நீர்வளம், நிலவளத்துடன் அழகரின் அருள்வளத்தால் அழகர்மலை நிரம்பி வழிகிறது. அழகர்கோவிலுக்குள் ஆயிரமாயிரம் அதிசய தகவல்கள் மூழ்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, அழகர்கோவில் கருவறையை ‘நங்கள் குன்றம்’ என்கின்றனர். கோயில் கருவறைப்பகுதிக்கு மட்டுமே தனி பெயர் இங்கு மட்டுமே அழைக்கப்படுகிறது. கருவறை அடி முதல் முடி வரையான இக்கோயில் விமானம் வட்ட வடிவ அமைப்புடையது. வட்ட வடிவ கருவறை அமைப்பு தமிழகத்தில் அழகர்கோயிலுடன், காஞ்சிபுரம் கரபுரீஸ்வரர், புதுக்கோட்டை நார்த்தாமலை விசயாலயச் சோழீஸ்வரம் ஆகிய 3 பழமைக் கோயில்களில் மட்டுமே இருக்கின்றன.அழகர்கோவிலின் இந்த வட்ட வடிவக் கருவறையைச் சுற்றி, அதனுள்ளேயே வட்ட வடிவில் ஒரு திருச்சுற்று பிரகாரமும் இருக்கிறது. இக்கோயிலின் இந்த கருவறை அமைப்பானது பிற்கால சோழர் காலத்திற்கும் முந்தியது. பவுத்த கோயிலுக்குரிய வடிவமிக்க இக்கோயிலின் ஆதி தல விருட்சம் போதி (அரச) மரமாக இருந்ததும் அறியப்படுகிறது. இக்கோயிலில் யுகத்திற்கு ஒன்றாக நான்கு யுகங்களிலும் நான்கு தல விருட்சங்கள் இருந்தாக அழகர் குறவஞ்சி, சோலைமலைக் குறவஞ்சி இலக்கியங்கள் பேசுகின்றன. இன்னும் ரங்கம் கோயில், அழகர்கோயில் இடையே கோட்டை மதிற்சுவர்கள், சுதர்சன வழிபாடு, ஆர்யன் வாசல், ஆர்யபடான் வாசல் என பிரதான வாயில்கள், தனி நெய்யில் பிரசாதம், விளக்கிடுதல் என்பதுடன் திருவிழாக்களிலும் ஒற்றுமை காண முடிகிறது.ஆனாலும்.. பக்தர்கள் இறைவனைத் தேடிச் செல்வது ஒருபுறமிருக்க, தன் மலையிலிருந்து பல்லக்கு பயணத்தில் இறைவனே பக்தர்களைத் தேடி மதுரை நகர் வரை வந்து 400க்கும் அதிக மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிற அதிசயம் ஆண்டுக்கொரு முறை இங்கு மட்டுமே நடக்கிறது. மீனாட்சி கோயில் திருவிழாவை தொடர்ந்து அழகர் பெருமாள் வந்து செல்வதென ஒரு அற்புதப் பெருவிழா ஒட்டுமொத்த சித்திரை விழாவாக இரண்டரை வாரங்கள் இந்த மதுரை மண்ணில் நடந்தேறி கடந்திருக்கிறது. இவ்விழா கொட்டிச் சென்றுள்ள குதூகலம், அடுத்த ஆண்டு வரையிலும் மனதின் ஆழத்திற்குள் அமர்ந்து, எண்ணும்போதெல்லாம் இதம் சுகம் நிறைக்கும்….

The post மலையை அடைந்தார் அழகர்: சித்திரை திருவிழா இன்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Alaghar ,Chitrai festival ,Madurai ,Alagar ,Vaigaya ,Chitrai ,Utsava Shanti ,
× RELATED வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி