×

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ.6 கோடி மதிப்பில் வனஉயிரினங்களுக்கான மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ.6 கோடி மதிப்பில் வனஉயிரினங்களுக்கான மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டிருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பொதுமக்களுக்கான வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ரூ.6 கோடியில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பினை இடுசெய்து உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து வன உயிரினங்களுக்கான உணவு வழங்குதல் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்தியாவிலேயே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மிகவும் சிறப்பானதாக திகழ்ந்து வருகிறது. இதில் கூடுதல் வசதிகளை உருவாக்கி பொதுமக்களுக்கான அடிப்படை தேவைகளை சிறப்பாக நிறைவேற்றிட ரூ.15 கோடி மதிப்பில் பிரேரணை அனுப்பி பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு வரும் நிதிநிலை அறிக்கையில் பெறப்பட்டு விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். உயிரியல் பூங்கா ஆய்வின்போது அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இன்றைய தினம் உயிரியல் பூங்காவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டதில் பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் சீரமைக்கவும், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கான கூடாரங்கள் சேதமைடைந்துள்ளதை முழுமையாக புதுப்பிக்கவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பூங்காவில் விலங்குகளுக்கு நல்ல உணவு வழங்கவும், கோடைக்காலத்தில் குடிநீர் வழங்கவும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரியல் பூங்காவில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களின் கோரிக்கையின்படி தகுதியானவர்களுக்கு சட்டப்படி வழங்கவேண்டிய சலுகைகள் மற்றும் பணிவரன்முறை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களின் ஆணைக்கிணங்க வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்திட  வரும் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2.50 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான பெரும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதேபோல் வரும் 10 ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு 31 கோடி மரக்கன்றுகள் வீதம் பல்வேறு திட்டங்களில் மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுவருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வுகளின்போது கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திருமதி வி.கருணப்பிரியா, இ.வ.ப., / துணை இயக்குநர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா டாக்டர் ஆர். காஞ்சனா, இ.வ.ப., சென்னை, கிண்டி தேசிய பூங்கா வனஉயிரினக்காப்பாளர் திரு. ஈ. பிரசாந்த், இ.வ.ப., / உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர்கள் ஏ. தயாசேகர், கே.ஸ்ரீதர், உயிரியலாளர்கள் மற்றும் வனச்சரககர்கள் பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்து தெரிவித்தார்கள். …

The post வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ.6 கோடி மதிப்பில் வனஉயிரினங்களுக்கான மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vandalur Arijar Anna ,Zoo ,Minister ,Ramachandran ,Chennai ,Forests ,Vandalur Arinjar Anna Zoo ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை கடித்து குதறிய முதலை