×

பள்ளிக் கல்வித்துறை மற்றும் Cognizant நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில்நுட்ப தரமேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது

சென்னை: 95 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கி ,பள்ளிக் கல்வித்துறை மற்றும் Cognizant நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில் நுட்ப தர மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.03.2022) தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமை சிந்தனையாளருமான தோழர் ஜீவா என்றழைக்கப்படும் திரு. ஜீவானந்தம் அவர்களின் பேரனான திரு. ம.ஜீவானந்த் (மாற்றுத்திறனாளி) அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் சிறப்பு நேர்வாக பணிநியமன ஆணையினை வழங்கினார். தமிழகத்தில்  இயங்கிவரும்  அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் ஒன்றிய அளவிலான ஆய்வு அலுவலர்களாக தொடக்ககல்வி இயக்ககத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பணிபுரிகிறார்கள். ஒன்றிய அளவில் செயல்படும் பள்ளிகளில் அரசின் நலத்திட்ட உதவிகளை கொண்டு சேர்த்தல் மற்றும் மாணவர்களின் கற்றல் மேம்பாட்டினை தொடர்ந்து கண்காணிப்பது இவர்களின் முக்கிய பணியாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வட்டாரக்கல்வி அலுவலர் பணியிடங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 95 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்குவதன் அடையாளமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 4 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் தொழில் நுட்பக் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், எளிமையாக தொழில் நுட்ப கற்றல் வளங்களை பள்ளிகளில் உருவாக்கிடவும், தொழில் நுட்ப மற்றும் கணினி மயமான பள்ளிகளின் செயல்முறைக்கு ஏற்றவகையில் ஆசிரியர்களின் தொழில் நுட்ப திறனை மேம்படுத்திடவும் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை மற்றும் Cognizant நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில் நுட்ப தரமேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், கணினிமயக் கற்றல் மேம்பாட்டுத் திட்டத்திற்கு Cognizant நிறுவனம் அறிவுசார் பங்குதாரராக தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயலாற்றும். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதி, பேராசிரியர் ஜெயபிரகாஷ் அவர்களால் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்ட “திருக்குறள் உரை” மற்றும் எழுத்தாளர் திரு. சுந்தர ராமசாமி அவர்கள் எழுதி, திருமதி கௌரி கிருபானந்தன் அவர்கள் தெலுங்கில் மொழிபெயர்த்த “ஒரு புளியமரத்தின் கதை” ஆகிய நூல்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்கள். இந்நூல்கள் திசைதோறும் திராவிடம் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் 7-வது மற்றும் 8-வது நூல்கள் ஆகும். இந்நூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் ஹைதராபாத் புக் டிரஸ்ட் நிறுவனத்தோடு கூட்டுவெளியீடுகளாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திரு. திண்டுக்கல் ஐ.லியோனி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக் கல்வித் துறை ஆணையர் திரு. க.நந்தகுமார், இ.ஆ.ப., தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் டி.மணிகண்டன் இ.ஆ.ப., Cognizant நிறுவனத்தின் அரசு விவகாரங்கள் தலைவர் திரு.கே. புருஷோத்தமன், துணைத் தலைவர் திரு. கௌரவ் ஹஸ்ரா, Cognizant Foundation தலைமை செயல் அலுவலர் திருமதி ராஜஸ்ரீ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post பள்ளிக் கல்வித்துறை மற்றும் Cognizant நிறுவனமும் இணைந்து பள்ளிகளில் தொழில்நுட்ப தரமேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Development in Schools ,Department of School Education and Cognizant ,Chennai ,Department of School Education ,Cognizant Institute of School Education and Cognizant ,School Education Department ,Cognizant ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்