×

உக்ரைனில் சிக்கி தவித்த தமிழக மாணவர்களின் கடைசி குழு மீட்பு சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்றார்: கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி

சென்னை: உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 பேர் மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கடைசியாக நேற்று காலை சென்னை வந்த 9 மாணவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக விமான நிலையம் சென்று வரவேற்றார். கடந்த பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில உக்ரைனுக்கு சென்ற மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ் மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என கடந்த பிப்.24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதை தொடர்ந்து, மாநில அளவில் அன்றே கட்டுப்பாட்டு அறை உருவாக்க அரசு செயலாளர், பொது மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு முதல்வர் ஆணையிட்டார். மேலும், பொறுப்பு அலுவலராக ஆணையர், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை அதிகாரியை நியமனம் செய்ததுடன், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களை பொறுப்பு அலுவலர்களாகவும், டெல்லியில் கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மை உள்ளுறை ஆணையர் மற்றும் உள்ளுறை ஆணையர் ஆகியோரையும் பொறுப்பு அலுவலர்களாக நியமித்து ஆணை வழங்கப்பட்டது.சென்னையில் 24 மணி நேரம் இயங்கக்கூடிய அவசரக் கட்டுப்பாட்டு அறையும், 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும், 99402 56444, 96000 23645 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டது. மேலும் மின்னஞ்சல் முகவரிகளும் அறிவிக்கப்பட்டு அதன்வாயிலாக, உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழ்மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் சேகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த பிப். 26ம் தேதி முதல்வர் இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு சென்று காணொலி அழைப்பு வாயிலாக உக்ரைனில் மருத்துவம் பயிலும் 3 மாணவர்களுடன் தொடர்புகொண்டு உரையாடி அவர்களுக்கு தைரியத்தையும் அறிவுரைகளையும் அளித்தார்.மேலும், 1921 பேர் 3501 தொலைபேசி அழைப்புகள் மூலமும், 4426 மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு உக்ரைன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் பெற்றோர், உறவினர்கள் மூலமாக அவர்கள் விவரம் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க ஒன்றிய வெளியுறவு துறையிடம் பகிரப்பட்டது.இந்நிலையில், உக்ரைனில் இருந்து தமிழ் மாணவர்களின் மீட்பு நடவடிக்கை தாமதமான காரணத்தினால் மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடந்த பிப்.28ம் தேதி தொலைபேசி வாயிலாகவும், பின்னர் மார்ச் 3ம் தேதி கடிதம் மூலமாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். மேலும் எம்பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா மற்றும் அஜய் யாதவ், கோவிந்தராவ், எம்.பிரதீப்குமார் மற்றும் கமல்கிஷோர் ஆகிய இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று தமிழ் மாணவர்களை மீட்கும் பணி செய்ய அனுமதி கோரப்பட்டது.உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவோகியா போன்ற நாடுகளின் வழியாக தமிழ் மாணவர்களை மீட்பது தொடர்பாகவும் மிகவும் விரிவாக வெளியுறவுத்துறை அமைச்சருடன் விவாதிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சரும் தமிழ் மாணவர்களை மீட்கும் பணியை விரைவுபடுத்துவதாகவும் உறுதி அளித்தார். 35 மாணவர்கள் உக்ரைன் நாட்டின் சில பகுதிகளிலிருந்து அருகாமையிலுள்ள ஹங்கேரி நாட்டிற்கு பயணம் செய்த செலவு மற்றும் சுமார் 160 மாணவர்களுக்கு உக்ரைன்-ருமேனியா நாட்டின் எல்லைக்கு செல்வதற்கும் அங்கிருந்து ருமேனியா நாட்டின் தலைநகரமான புகாரெஸ்டிற்கு செல்வதற்கான செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொண்டது. உயர்மட்டக்குழு அமைத்த பின்னர் தமிழக முதல்வரின் சீரிய முயற்சியின் காரணமாக தமிழக மாணவர்கள் மீட்கும் பணி மேலும் வேகமெடுத்ததுடன் தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலும் அழைத்து வரப்பட்டனர். தமிழக மாணவர்கள் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டதுடன், தமிழகம் அழைத்து வரப்பட்டதும் துரிதப்படுத்தப்பட்டது. பிரத்யேகமாக மூன்று சிறப்பு விமானங்களும் தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தமிழ்நாடு அரசால் ரூ.3.50 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த 7ம் தேதி முதல்வர் மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் திருநெல்வேலி மாவட்டம், ஜோதிபுரத்தில், உக்ரைனில் மருத்துவப் பட்டப் படிப்பு படித்து வரும் நிவேதிதா, திவ்யபாரதி, ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோரை அவர்களது வீட்டில் சந்தித்தபோது, மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர்வதற்கு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் எனவும் முதல்வர் கூறினார். தமிழக முதல்வரின் சீரிய நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் 1524 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் செலவில் தமிழகம் அழைத்து வரப்பட்டு, அவர்கள் இல்லம் செல்லும் வரை கொண்டு சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 366 மாணவர்கள் அவர்களது சொந்த செலவில் தமிழகம் திரும்பியுள்ளனர். இதுதவிர 31 மாணவர்கள் உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறிவிட்டனர். இவர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடைசியாக வந்த 9 மாணவர்களை தமிழக குழு மீட்டு டெல்லிக்கு அழைத்து வந்தது. அங்கிருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், கே.எஸ்.மஸ்தான், எம்பிக்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.* உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்த தமிழர்களை பத்திரமாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தமிழ்நாடு அரசால் ரூ.3.50 கோடி நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டது.* முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை காரணமாக உக்ரைனில் மருத்துவக்கல்வி பயின்று வந்த 1921 மாணவர்களில் இதுவரை 1890 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்* மீதமுள்ள 366 மாணவர்கள் அவர்களது சொந்த செலவில் தமிழகம் திரும்பியுள்ளனர். இதுதவிர 31 மாணவர்கள் உக்ரைன் மற்றும் அண்டை நாடுகளில் பாதுகாப்பான பகுதிகளில் குடியேறிவிட்டனர்….

The post உக்ரைனில் சிக்கி தவித்த தமிழக மாணவர்களின் கடைசி குழு மீட்பு சென்னை விமான நிலையத்தில் மாணவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவேற்றார்: கண்ணீர் மல்க முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ukraine ,Chennai airport ,CM. G.K. Stalin ,Malka ,Principal ,chennai ,ukrain ,B.C. ,G.K. Stalin ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...