×

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அனைத்து நிகழ்ச்சி நிரலும் கணினியில் பதிவேற்றம்

சென்னை: கோயில்களின்  சிறப்பம்சங்கள், திருவிழாக்கள், உற்சவங்கள் குறித்த  நிகழ்ச்சி விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய ஆணையர் குமரகுருபரன் மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கடந்த நவம்பர் 30ம் தேதி நடந்த சீராய்வு கூட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் உள்ள காகிதப்படைப்புகள் மற்றும் கோயில் நிகழ்ச்சி விவரங்கள் குறித்த கையெழுத்து பிரதிகள் ஆகியவற்றை  புதுப்பிப்பது, கணினிமயப்படுத்தி வலைதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பண்டைய காலத்தில் வாழ்ந்த புலவர்கள், அறிஞர்கள் மற்றும் சித்தர்கள் அக்கால நாகரிகம், பண்பாடு கோயில்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த குறிப்புகள் மற்றும் பக்தி பாசுரங்கள், இலக்கியங்கள், சமய நூல்கள் ஆகியவற்றை பிற்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் பனை ஓலைச்சுவடிகள் எழுதி வைத்தனர். அதன் பின்னர் இவை அனைத்தும் காகிதப்படைப்புகளாக எழுதப்பட்டு கோயில்களில் பராமரிக்கப்பட்டன. மேலும் கோயில்களில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த குறிப்புகள் கையெழுத்துப்பிரதியாக பேணப்பட்டு வரப்பெற்றுள்ளன. இவை சைவத்திருக்கோயில்களில் ‘பராபத்து’ என்றும் வைணவத்திருக்கோயில்களில் ‘பட்டோலை’ என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றை புதுப்பித்து பாதுகாக்க வேண்டியது அவசர, அவசியமாகவுள்ளது.ஆகவே புகழ் பெற்ற கோயில்களில் உள்ள காகிதப்படைப்புகள் மற்றும் திருவிழாக்கள், உற்சவங்கள் குறித்த நிகழ்ச்சி விவரங்களின் கையெழுத்து பிரதிகளை பாதுகாக்கும் நோக்கில் இவற்றினை புதுப்பித்து கணினிமயப்படுத்தி மற்றும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக தங்கள் மண்டலத்திற்குட்பட்ட முக்கிய கோயில்களில் உள்ள காகிதப்படைப்புகள் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் அடங்கிய குறிப்பின் கையெழுத்து பிரதிகளை பாதுகாப்பாக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு இணை ஆணையர்கள் கேட்டுகொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அனைத்து நிகழ்ச்சி நிரலும் கணினியில் பதிவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Foundation ,Chennai ,Minister of the Minister of State ,the Co-ordinator ,Kumarubarubaran Zone ,Hindu Religious Hotels ,
× RELATED உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில்...