×

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மார்ச் 18ல் தமிழக பட்ஜெட் தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வருகிற 18ம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று அறிவித்தார். தமிழக பட்ஜெட் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சபாநாயகர் அப்பாவு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரானது வருகின்ற 18ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கின்றார். காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட இருக்கின்றது. தொடுதிரை உதவியோடு கணினி முறையில் ஏற்கனவே கடந்த ஆண்டு வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்ததுபோன்று, இந்த ஆண்டும் தாக்கல் செய்யப்படும். வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்த பிறகு, எனது தலைமையில் (சபாநாயகர்) ஆய்வு குழு கூட்டம் கூடி எத்தனை நாட்கள் வரவு-செலவு திட்டத்தின் மீது விவாதம் நடத்தி, எத்தனை நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்து அதன் அடிப்படையில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். அதோடு, 2022-2023ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2021-2022ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் வருகிற 24ம் தேதி இதே சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார். வேளாண் பட்ஜெட் குறித்து, 18ம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுத்து அன்றைய தினம் அறிவிக்கப்படும். தமிழக அரசின் வரவு-செலவு திட்டமானது தாக்கல் செய்யப்பட்டு, விவாதத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அலுவல் ஆய்வு குழுவில் என்ன முடிவு எடுக்கிறார்களோ அந்த முடிவு அடிப்படையில்தான் வரவு-செலவு திட்டத்தின் விவாதம் நடைபெற்று முடிவுபெறும். அதன்பிறகு, மானிய கோரிக்கைகள் எப்போது நடைபெறும் என்பதை தொடர்ந்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். அலுவல் ஆய்வு கூட்டத்தில், தொடர்ந்து மானிய கோரிக்கை கூட்டத்தை நடத்தலாம் என்றால், அதுவும் தொடர்ந்து நடத்தப்படும். அலுவல் ஆய்வு குழு எடுப்பதுதான் இறுதி முடிவு. 18ம் தேதி வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்யும்போது முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். அதேபோன்று, சட்டமன்ற கூட்டம் நடைபெறும்போது முதலில் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இந்த கேள்வி-பதிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்த அரசின் கொள்கை முடிவு என்பது, சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் நேரடி ஒளிபரப்பு வழங்க வேண்டும் என்பதுதான். ஆனாலும், முதல் கட்டமாக கேள்வி-பதில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேர ஒளிபரப்பில் சில பிரச்னைகள் இருக்கிறது. இதுபற்றி தொடர்ந்து கண்காணித்து, ஆய்வு செய்து, சரியான ஒரு நிலைக்கு வந்தபிறகு அனைத்து நடவடிக்கைகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.கடந்த மாதம் 8ம் தேதி, நீட் தொடர்பான மசோதா மீண்டும் இந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றி கொடுக்கும்போது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதனால், இன்னும் அதோடு சிறப்பாக கூட்டத்தொடர் நடக்கும். நீட் தொடர்பான மசோதா, தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டாரா என்பது குறித்து விசாரித்து தகவல் கொடுக்கிறேன். தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இருந்தாலும், சட்டமன்றத்துக்குள் வரும்போது எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றவர்களும் ஏற்கனவே இருந்த நடைமுறைகளின்படி மாஸ்க் போட்டு வருவது உள்ளிட்ட நடைமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். இருமல், சளி போன்ற சிறிய அறிகுறிகள் இருந்தால், ஆர்டிபிசிஆர் சோதனை செய்வது கொள்வது நல்லது.இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசின் பட்ஜெட் 18ம் தேதி தாக்கல் செய்வதை தொடர்ந்து, வருகிற 19ம் தேதி (சனி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீது விவாதம் நடத்தவும், 24ம் தேதி பட்ஜெட் விவாதத்துக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலுரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றம் கூடி, மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், தமிழக மக்களிடம் 2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மார்ச் 18ல் தமிழக பட்ஜெட் தாக்கல்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Speaker ,Abba ,Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...