×

மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 5529 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வார்வாணையம் (டிஎன்பிஎஸ்இ) வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பணிகளில் அடங்கிய 5529 பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வுக்கு மார்ச் 23ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்கள் அடிப்படை விவரங்களை இணைய  வழி நிரந்தப்பதிவு(OTR) மூலமாக கட்டாயப் பதிவு  செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு 5 வருடங்களுக்கு செல்லத்தக்கது. அதன்பிறகு உரிய பதிவுக் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வுக்கான பதவிகளை பொருத்தவரையில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் நடக்கும். இதன்படி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் 11, நன்னடத்தை அலுவலர் 2, தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் 19, பதிவுத்துறையில் சார்பதிவாளர் கிரேடு(2) 17, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்(மாற்றுத் திறனாளிகள்) 8, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் சிறப்பு உதவியாளர் 1, நுண்ணறிவு பிரிவில் தனிப்பிரிவு உதவியாளர் 15, குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு பிரிவில் தனிப் பிரிவு உதவியாளர் 43 என மொத்தம் 116 பணியிடங்களுக்கு மேற்கண்ட தேர்வு நடக்கிறது. நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளை பொருத்தவரையில் முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் பணிகள், நகராட்சி ஆணையர், தலைமைச் செயலகப் பணிகள், டிஎன்பிஎஸ்சி பணியிடங்கள், கூட்டுறவு சங்கத்துறைப்பணிகள், சட்டக் கல்லூரி விடுதிக் காப்பாளர் பதவிகள், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, வேளாண்மை மற்றம் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி்த துறை கோட்டங்களில் உதவியாளர்கள், வணிக வரித்துறை உதவியாளர்கள், தமிழ்நாடு அமைச்சுப்பணி, பேரூராட்சிகள் சார்நிலைப் பணி, தமிழ்நாடு சட்டப் பேரவை தலைமைச் செயலகபணிகளில் பல்வேறு துறைகளில் நேர்முக எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், பணிகள் என மொத்தம் 5413 பணிகளுக்கு தேர்வு நடக்கிறது. இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் மார்ச் 23ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். முதல் நிலைத் தேர்வு 21.5.2022ல் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 வரை நடக்கும். முதன்மை எழுத்துத் தேர்வு, முதல் நிலைத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வெளியிடப்படும். அனைத்து பதவிகளுக்கும்(நன்னடத்தை அலுவலர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தவிர) குறைந்த பட்ச வயது வரம்பு 18 வயது, சார்பதிவாளர் கிரேடு 2க்கு வயது வரம்பு 20 வயது, நன்னடத்தை அலுவலர் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை – 22 வயது, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்(அ), மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், உள்ளிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை, ஏனையோருக்கு 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிவுக் கட்டணத்தை பொருத்தவரையில் நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150, முதல்நிலைத் தேர்வு ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இந்த தேர்வு மையங்களில் ஏதாவது இரண்டு மையங்களை விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த இரண்டில் ஒரு தேர்வு மையம் ஒதுக்கப்படும். மாற்றுத் திறனாளிகள் ஒரு தேர்வு மையத்தை தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்கள் விண்ணப்பத்தில் தெரிவிக்கும் விவரங்களை, தேர்வாணையம் கேட்கும் போது இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய நேரத்தில் சான்றுகளை பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும், கூடுதல் விவரம் வேண்டுவோர் www.tnpsc.gov.in ன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 5529 பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Nadu ,Government ,DNBSE ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்து விதிமுறைகள்...