×

தேர்தல் முடிந்து விதிமுறைகள் தொடர்ந்தாலும் மக்கள் நல பணியில் சுணக்கம் இருக்காது: அதிகாரிகள் தகவல்

சென்னை: நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்தாலும் மக்கள் நல பணியில் சுணக்கம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஆளுங்கட்சியினர் எந்தவிதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை நடத்துதல், அரசு சாரா பணி நியமனங்கள், பொதுத்துறையில் பணி நியமனங்களை செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிகளும் அமல்படுத்தப்பட்டன. இதுதவிர, பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகளிடம் கடந்த 3 வாரமாக பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடரும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருந்தார். இது வியாபாரிகள், பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், வாக்குப்பதிவு நாள் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்தாக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும், வாக்கு எண்ணிக்கை முடிவடையும் வரை அதை நீட்டிப்பது எந்த வகையில் நியாயம் என்றும், சிறுதொழில் செய்வோர், வணிகர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை தேர்தல் முடிந்த பின்னரும் முடக்கி வைப்பது ஏற்புடையதல்ல என்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இதனையடுத்து இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் தமிழகத்தின் எல்லைகளில் மட்டும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி, பறக்கும்படையை திரும்ப பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான கோரிக்கையில் தளர்வு ஏற்படுத்தினாலும், அரசு நிர்வாகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் தான் உள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் அரசியலமைப்பு 324வது பிரிவின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.

அதன்படி, இந்த விதிகள் தேர்தல் தேதி அறிவித்து, வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அமலில் இருக்கக்கூடிய ஒன்றாகும். இதன் மூலம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயலாற்றி வருகிறோம். இதன் மூலம் மக்கள் நல பணிகள் சுணக்கமின்றி நடந்து வருகின்றன. வாக்குப்பதிவு முடிந்தாலும் அரசு சார்ந்த விஷயங்கள் முழுவதுமாக தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் தான் உள்ளன. அரசின் நல திட்டங்கள் குறித்தான ஆலோசனை மற்றும் கருத்தரங்க கூட்டங்களை நடத்த அனுமதி உண்டு.

ஆனால், புதிய அரசாணைகளை பிறப்பிப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி அளித்தால் தான் அதனை நிறைவேற்ற முடியும். இடைக்கால அறிக்கைகளுக்கு அதிகாரிகளுக்கு உரிமை உள்ளதால், இது விதிமுறைகளில் வராத ஒன்றாகும். மேலும், தலைமைச்செயலகத்தில் முதல்வர் அலுவல் சார்ந்த விஷயங்களையும், அரசு நல திட்டங்கள் சார்ந்த விவரங்களை அறிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளலாம். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான ஆலோசனை மற்றும் திட்டமிடல்கள் நடத்த வாய்ப்பு இருப்பதால் இந்த கூட்டங்களில் அமைச்சர்கள் பங்கேற்று அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கலாம் என்றார்.

The post தேர்தல் முடிந்து விதிமுறைகள் தொடர்ந்தாலும் மக்கள் நல பணியில் சுணக்கம் இருக்காது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...