×

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அமெரிக்காவுக்கு ‘கழுதைப்பாதை’ வழியாக ஆட்களை அனுப்பிய கும்பல்: ஜார்கண்ட் மாநில போலீசார் அதிரடி

ஹசாரிபாக்: அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஆபத்தான ‘கழுதைப்பாதை’ வழியே சட்டவிரோதமாக மக்களை அனுப்பி வந்த சர்வதேச ஆள் கடத்தல் கும்பலை ஜார்கண்ட் காவல்துறை கைது செய்தது. ஜார்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தைச் சேர்ந்த சோனு குமார் என்பவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவருமான உதய் குமார் குஷ்வாஹா என்பவர், தான் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியுள்ளார்.

இதை நம்பிய சோனு குமாரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, 2024ம் ஆண்டு அவரை போலி ஆவணங்கள் மூலம் பிரேசிலுக்கு அனுப்பியுள்ளார். அங்கு சென்றதும், சோனு குமார் ஆள் கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேபோல் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட பிகாஷ் குமார், பிந்து குமார் ஆகியோரும் அந்த கும்பலிடம் இருந்துள்ளனர். மூவரையும் பொலிவியா, பெரு, ஈக்வடார், கொலம்பியா, பனாமா, கோஸ்டாரிகா, ஹோண்டுராஸ், குவாத்தமாலா வழியாக மெக்சிகோ நகரத்திற்கு சட்டவிரோதமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த காலகட்டத்தில் சோனுவின் குடும்பத்தினரை மிரட்டி, உதய் குமார் குஷ்வாஹா 45 லட்சம் ரூபாய் பறித்துள்ளார்.

தங்களது மகனைக் காப்பாற்ற, சோனுவின் தந்தை தனது பூர்வீக சொத்தை விற்று பணத்தைக் கொடுத்துள்ளார். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவின் சான் டியாகோவிற்குள் நுழைந்த சோனு குமாரை, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து சுமார் நான்கு மாதங்கள் சிறையில் அடைத்து, பின்னர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு நாடு கடத்தினர். நாடு திரும்பிய சோனு, தான் இழந்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, உதய் குமாரும் அவரது சகோதரரும் அவரைக் கடுமையாகத் தாக்கி மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த சோனு, உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், ஹசாரிபாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு தனிப்படையை அமைத்தார். அவர்கள் நடத்திய அதிரடி விசாரணையில், ஆள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட உதய் குமார் குஷ்வாஹா, தர்ஷன் பிரசாத், லால் மோகன் பிரசாத், சோஹன் பிரசாத் மற்றும் சங்கர் பிரசாத் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைபேசிகள், போலி ஆவணங்கள், வங்கி ரசீதுகள் மற்றும் கடத்தப்பட்ட நபர்களின் விவரங்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கழுதைப்பாதை என்பது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்குச் செல்ல விரும்பும் நபர்களை, உரிமம் பெறாத முகவர்கள் மூலம் அதிகாரப்பூர்வமற்ற, ஆபத்து நிறைந்த வழிகளில் பல நாடுகள் வழியாக சட்டவிரோத அழைத்துச் செல்லும் வழிமுறையாகும். இந்தக் கும்பல் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பலரை இதேபோல் ‘கழுதைப்பாதை’ வழியே அமெரிக்காவுக்கு அனுப்பிய பட்டியல் ஒன்றும் சிக்கியுள்ளது. சர்வதேச கடத்தல் கும்பலுடன் இந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளது. இதுதொடர்பாக மேலதிக விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகிறது’ என்று கூறினர்.

The post இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அமெரிக்காவுக்கு ‘கழுதைப்பாதை’ வழியாக ஆட்களை அனுப்பிய கும்பல்: ஜார்கண்ட் மாநில போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : India ,America ,Jharkhand state police ,Hazaribagh ,Jharkhand police ,Sonu Kumar ,Jharkhand ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...