புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்து வரும் 27ம் தேதி முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, ‘விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் (ஜி ராம் ஜி)’ என்ற புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ேநற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம், கிராமப்புற குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வேலைநாட்களின் எண்ணிக்கை 100லிருந்து 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டத்திற்கான நிதியில் முன்பு ஒன்றிய அரசே முழுமையாக வழங்கி வந்த நிலையில், தற்போது 40 சதவீதத்தை மாநில அரசுகளே ஏற்க வேண்டும்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு 10 சதவீத பங்கு எனவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டின் போதும் விவசாயப் பணிகள் நடக்கும் போது 60 நாட்கள் வரை இத்திட்டத்தை நிறுத்தி வைக்கலாம் என்று புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு, நீர் மேலாண்மை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நாட்டின் தந்தை மகாத்மா காந்தியின் பெயரை இந்தச் சட்டத்திலிருந்து நீக்கியிருப்பது தேசத்தந்தைக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமரியாதையாகும். குளிர்கால கூட்டத்தொடரில் ரவீந்திரநாத் தாகூரை அவமதிப்பதில் தொடங்கி, தேசத்தின் அடையாளமான காந்தியை அழிக்கும் முயற்சியில் முடிந்துள்ளது. மாநில அரசுகள் 40 சதவீத நிதியை ஏற்கும் நிலையில் இல்லை.
இந்த நிதிச்சுமை திட்டத்தையே இயற்கையான மரணத்தை நோக்கி தள்ளிவிடும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பாமலும், பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்காமலும் ஒன்றிய அரசு தன்னிச்சையாக இச்சட்டத்தை திணித்துள்ளது. மாநிலங்களின் உரிமையைப் பறித்து அதிகாரத்தை மையப்படுத்துவதாகவும் உள்ளது’ என விமர்சித்துள்ளார். மேலும் இதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்துவது குறித்து வரும் 27ம் தேதி நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‘வரும் 27ம் தேதி காங்கிரஸ் செயற்கூட்டம் தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா பவனில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடக்கிறது.
மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும். பீகார் தேர்தல் தோல்வி குறித்த ஆய்வு மற்றும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன’ என்று கூறினர்.
