- டிஐஜி
- பளை
- நெல்லை
- ராம ஜெயம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்சி சாரகா
- வருங்குமார்
- பாளை மத்திய சிறைச்சாலை
நெல்லை: தமிழகத்தை உலுக்கிய திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக பாளை மத்திய சிறையில் கைதி ஒருவரிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012 மார்ச் 29-ம் தேதி தனது வீட்டிலிருந்து அதிகாலையில் நடை பயிற்சிக்கு சென்றபோது மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிசிஐடி, சி.பி.ஐ என பல புலனாய்வு அமைப்புகள் விசாரித்தும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் திருச்சி டி.ஐ.ஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்பி ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரியாக நியமித்தது.
இந்நிலையில் டி.ஐ.ஜி வருண்குமார் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் (ஆக.1ம் தேதி) மாலை நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்து, கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்து வரும் சுடலைமுத்து என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சி ராமஜெயத்தின் கொலை நடந்த சமயத்தில் தொழிற் பயிற்சிக்காக திருச்சி சிறைக்கு சுடலைமுத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன் ராமஜெயம் வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த செல்போனை அப்போது ஜெயிலராக இருந்தவர் பறிமுதல் செய்து உடைத்து விட்டதாக வெளியான தகவல் அடிப்படையில் சுடலைமுத்துவிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். அவரிடம் சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடத்திவிட்டு, குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரியில் முகாமிட்டு தங்கி உள்ளனர்.
இன்று 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் எனவும், தேவைப்பட்டால் கைதி சுடலைமுத்துவை திருச்சிக்கு விசாரணைக்காக அழைத்துச்செல்லலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ராமஜெயம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; பாளை சிறை கைதியிடம் டிஐஜி நேரில் விசாரணை: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.
