×

கட்சி விரோத செயல்பாடுகள் ஜி.கே.மணிக்கு அன்புமணி நோட்டீஸ்: ராமதாஸ் அணி தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு

 

சென்னை: கட்சி விரோத செயல்பாடுகள் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என விளக்கக் கோரி ஜி.கே.மணிக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ராமதாஸ்-அன்புமணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இரு தரப்பினரும், மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக ராமதாஸ் அணி டெல்லியில் அன்புமணிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கூட ஜி.கே மணி அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், அன்புமணியின் செயல்பாடுகளால் தான் ராமதாஸ் கண்ணீர் வடிக்கிறார். அன்புமணி என்னிடம் வந்து ஒன்றிய அமைச்சர் பதவி கேட்கக் கூறினார். நான் ராமதாசிடம் பேசி, நீங்கள் பதவிக்கு வரமாட்டேன் என்கிறீர்கள். உங்கள் மகனையாவது அமைச்சராக்கலாம் என்றேன். அவர் கடுமையாக என்னிடம் கோபப்பட்டார். அதன்பிறகு, காடுவெட்டி குருவை அழைத்து சென்று மீண்டும் ராமதாசிடம் பேசினோம். அவரும் வற்புறுத்தினார். அதன்பிறகு, அன்புமணியை அமைச்சராக்க ராமதாஸ் ஒப்புக்கொண்டார். பாமக கூட்டணி குறித்து எந்த தலைவர்களுடனும் நான் தான் பேசுவேன். ஒருமுறை என்னிடம் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நீங்கள்தான் போகவேண்டும் என்று ராமதாஸ் கூறினார். நான் அன்புமணியை பரிந்துரைத்தேன். அவரைத் தான் மாநிலங்களவை உறுப்பினராக்கினோம். ராமதாஸ் பலமுறை சிறைக்கு போனார். அன்புமணி எத்தனை முறை சிறைக்கு போனார்.

அன்புமணியை யாரும் சந்திக்க முடியவில்லை என்று நிர்வாகிகள் ராமதாசிடம் வந்து சொன்னார்கள். பாமக தனித்து போட்டியிட்டபோது, அன்புமணிதான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இப்படி, அவருக்கு எந்த கெடுதலும் செய்யாத என்னைப் பார்த்து துரோகி, அப்பாவையும், என்னையும் பிரித்துவிட்டார் என்கிறார். ராமதாசும், அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். வீட்டுக்குள் பேச வேண்டிய விஷயத்தை பொதுவெளியில் பேசியதால் தான் இத்தனை பிரச்சினை ஆரம்பித்தது. ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும். என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இந்நிலையில், ஜி.கே மணியின் பேச்சு மற்றும் செயல்பாடுகளுக்கு அன்புமணி பாமக தரப்பு விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து அன்புமணி பாமக தரப்பினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அவரது அண்மைக்கால செயல்பாடுகள் எல்லைக் கடந்தவையாக இருப்பதால், அதற்காக அவர் மீது கட்சியின் அமைப்பு விதி 30இன்படி நடவடிக்கை எடுப்பது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் நேற்று கூடி விவாதித்தது. அப்போது ஜி.கே.மணியின் இரு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்க தீர்மானிக்கப்பட்டது.

1. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் கூறி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த திசம்பர் 6ஆம் தேதி தில்லி காவல்துறை துணை ஆணையரிடம் புகார் அளித்தது மற்றும் நேர்காணல் அளித்தது. 2.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மீது அவதூறு பரப்பும் வகையில் கடந்த திசம்பர் 15ஆம் நாள் சென்னையில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தது. இந்த இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி ஜி.கே.மணி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : G. K. Anbumani ,Ramadas ,Chennai ,K. ,Anbumani ,
× RELATED எதிரிக்கட்சி தலைவராக எடப்பாடி...