×

இனி ரயில் பயண முன்பதிவு பட்டியல் 10 மணி நேரத்திற்கு முன்பே வெளியாகும்

 

சென்னை: இனி ரயில்வே முன்பதிவு பட்டியல் 10 மணி நேரத்திற்கு முன்பே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே முதல் முன்பதிவு பட்டியல் தயாரிக்கும் நேரத்தில் பெரிய மாற்றம் செய்துள்ளது. இனி பயணிகள் தங்கள் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா, இல்லையா என்பதை ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பாகவே தெரிந்து கொள்ளலாம். இதுவரை 4 மணி நேரம் முன்புதான் தெரிந்தது. இப்போது 10 மணி நேரம் முன்பே தெரியும். இந்த மாற்றம் பயணிகளின் கவலையை குறைத்து, பயணத்தை நன்றாக திட்டமிட உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, முதல் முறையாக ரயில்வே வாரியம் இந்த பட்டியல் நேரத்தை மாற்றியுள்ளது. முன்பு ரயில் கிளம்புவதற்கு வெறும் நான்கு மணி நேரத்திற்கு முன்புதான் பட்டியல் வரும். அதுவரை காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் மிகவும் கவலையுடன் இருப்பார்கள். டிக்கெட் கன்ஃபார்ம் ஆகுமா இல்லையா என்று தெரியாமல் கடைசி நிமிடம் வரை பதட்டத்தில் இருப்பார்கள்.

இதனால், முன்பதிவு அட்டவணையை 8 மணி நேரத்துக்கு முன் வெளியிட வேண்டும் என பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கையை ஏற்று அனைத்து மண்டல ரயில்வேயும் கடந்த ஜூலையில் இருந்து 8 மணி நேரத்துக்கு முன் அட்டவணையை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், முன்பதிவு அட்டவணை வெளியிடும் நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளனர். இப்போது என்ன மாற்றம் செய்யப்பட்டுள்ளது? என்றால் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை கிளம்பும் ரயில்கள் இந்த ரயில்களுக்கான முதல் பட்டியல் ரயில் கிளம்புவதற்கு 10 மணி நேரம் முன்பே வெளியிடப்படும். உதாரணமாக காலை 10 மணிக்கு ரயில் இருந்தால், இரவு 12 மணிக்கே பட்டியல் வெளியாகும்.மதியம் 2 மணிக்கு பிறகு கிளம்பும் ரயில்கள் மதியம் 2.01 மணி முதல் இரவு 11.59 மணி வரை கிளம்பும் ரயில்கள், மற்றும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கிளம்பும் ரயில்களுக்கும் இதே விதி. இவற்றுக்கும் 10 மணி நேரம் முன்பே பட்டியல் வரும்.

இதனால் பயணிகள் தங்கள் டிக்கெட் நிலை பற்றி முன்கூட்டியே தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ரயில்வே அதிகாரிகள் சொல்வது என்னவென்றால், பல பயணிகள் தூரத்திலிருந்து வருகிறார்கள். நீண்ட தூர ரயில்களில் ஏற ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். வெறும் 4 மணி நேரம் முன்பு பட்டியல் வந்தால், அவர்கள் டிக்கெட் கன்ஃபர்ம் ஆகவில்லை என்றால் என்ன செய்வது? ஏற்கனவே நிலையத்திற்கு வந்து விட்டார்கள். பெரிய பிரச்சனையாகிவிடும். இப்போது 10 மணி நேரம் முன்பே தெரிந்தால், பல விஷயங்களை செய்யலாம். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பயணிகளுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாற்றம். பட்டியல் முன்கூட்டியே வரும்போது, அவர்கள் தங்கள் பயணத்தை நன்றாக திட்டமிட முடியும். கவலை இல்லாமல் பயணம் செய்ய முடியும்.

குறிப்பாக தொலைவிலிருந்து வரும் பயணிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். அவர்கள் கடைசி நிமிடத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டார்கள். ரயில்வே வாரியம் இந்த உத்தரவை உடனடியாக அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதாவது இப்போதே இந்த புதிய முறை தொடங்கி விட்டது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரயில் மண்டலங்களிலும் இந்த புதிய நேர அட்டவணை பின்பற்றப்படும். இந்த மாற்றத்தை பயணிகள் மிகவும் வரவேற்றுள்ளனர். நீண்ட காலமாக இதை எல்லோரும் எதிர்பார்த்தனர். முக்கியமாக நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது மிகப்பெரிய நிம்மதியை கொடுக்கும். ரயில்வே இதுபோன்ற மேலும் பல பயணிகள் நல திட்டங்களை கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. அனைத்தும் பயணிகளின் வசதிக்காக மட்டுமே. இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : Chennai ,Indian Railways ,
× RELATED இந்திய ரயில்வே மின்மயமாக்கம் 99.2...