- சென்னை பல்கலைக்கழகம்
- ரீட்டா ஜான்
- நீதிமன்றம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- மதுரை
- டாக்டர்
- ஆர்.
- சுட்டமல்லியா, திருநெல்வேலி மாவட்டம்
- மோகன்ராஜ்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக ரீட்டா ஜான் நியமன உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வில், திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை சேர்ந்த முனைவர் ஆர்.மோகன்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில்,
சென்னை பல்கலைகழகத்திற்கான பதிவாளர் பணிக்கான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டபோது, உரிய ஆவணங்களுடன் மே 16ம் தேதி விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த 15 பேரில் 24 ஆண்டுகள் 10 மாதங்கள் என்ற அதிகபட்ச தகுதியுடன் எனது பெயர் இருந்தது. அவர்களில் 11 பேர் ஜூன் 24ம் தேதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட நிலையில், 9 பேர் மட்டுமே கலந்துகொண்டோம். அதில் 8 பேருக்கு குறுகிய நேரம் மட்டுமே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்த முனைவர் ரீட்டா ஜான் என்பவருக்கு மட்டும் 45 நிமிடங்களுக்கு மேல் நடத்தப்பட்டது.
எனது சான்றிதழ்களை முறையாக ஆய்வு செய்யாமலும், பரிசீலிக்காமலும் இருந்த தேர்வுக் குழுவால், ரீட்டா ஜான் பெயர் பதிவாளர் பணிக்கு பரிந்துரைக்கப்பட்டு அவரை பதிவாளராக நியமித்து ஜூன் 27ம் தேதி சென்னை பல்கலைகழக ஆட்சிமன்றக் குழு அறிவித்தது. இது குறித்து ஜூன் 27ம் தேதியே புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை. பதிவாளர் நியமனம் தொடர்பான முழு செயல்முறைக்கும் சிண்டிகேட்டிலிருந்து எந்த ஒப்புதலோ அல்லது அனுமதியோ பெறப்படவில்லை என்பது பல்கலைக்கழக சட்டங்களை முற்றிலும் மீறுவதாக உள்ளது.
எனவே சென்னை பல்கலைக்கழக பதிவாளராக முனைவர் ரீட்டா ஜான் நியமிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும், பதிவாளர் தேர்வுக் குழுவை விதிகளுக்குட்பட்டு முறையாக அமைக்க உத்தரவிட வேண்டும். பதிவாளர் பதவிக்கான தேர்வு நடைமுறையில் அனைத்து தகுதிகளுடனும் இருக்கும் என்னை முறையாக பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை பல்கலைக்கழகத்தின் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் தான் தாக்கல் செய்ய முடியும் எனக்கூறி இந்த வழக்கை சென்னைக்கு மாற்றுவதாக உத்தரவிட்டார்.
