×

உத்திரமேரூர் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தொகுதி நிலவரம், தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார். திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற பெயரில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம் தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உடன் பிறப்பே வா நிகழ்ச்சி மூலம் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பதை, சிறிது நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார். நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியேஆலோசனை நடத்தினார். இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது சட்டப்பேரவை தொகுதி நிலவரம், வெற்றி நிலவரம், கட்சி வளர்ச்சி பணி, உறுப்பினர் சேர்க்கை, கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள். இன்னும் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.

கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைக்க பாடுபட வேண்டும். 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி வாகை சூட உறுதி ஏற்க வேண்டும் உள்பட தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக கூறப்படுகிறது.

* நிர்வாகியை வாழ்த்திய முதல்வர்

ஒன் டூ ஒன் மூலம் சந்திக்க வந்த நிர்வாகி ஒருவரிடம், ‘‘கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து கட்சி தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றீர்கள். மகிழ்ச்சி’’ என்று முதல்வர் கூறினார். அப்போது நிர்வாகியிடம் மனம் விட்டு முதல்வர் பேசினார். அப்போது, அந்த திமுக நிர்வாகி பேசும்போது, ‘‘ஒவ்வொரு வீடாக சென்று மக்களை சந்திக்கும் போது மகளிர் உரிமை தொகை, பஸ்சில் இலவசமாக போகிறோம் என்று சொன்னார்கள்.

ஒரு வீட்டிற்கு போனோம், அப்போது அந்த வீட்டில் கல்லூரி படிக்கும் மகளும், மகனும் மாதம் ஆயிரம் கல்வி உதவித்தொகை வாங்குகிறார்கள். அம்மாவும் மகளிர் உரிமை தொகையாக ரூ.1000 வாங்குகிறேன் என்று சொல்கிறார்கள். இதை ரொம்ப சந்தோஷமாக சொல்லுகிறார்கள்’’ என்றார். இதை கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தோஷத்தில் சிரித்தார். தொடர்ந்து அந்த நிர்வாகி, வாழ்நாளில் ஒரு பாக்கியம், முதல்வரிடம் நேரில் சந்தித்து சகஜமாக பேசியது என்றார். தொடர்ந்து முதல்வர் அந்த நிர்வாகிக்கு புத்தகம் வழங்கி வாழ்த்தினார்.

The post உத்திரமேரூர் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Uthramarur Dimuka ,Chief Mu. K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Uttaramur Constituency Assembly Constituency ,K. Stalin ,Dimuka ,Uthramaroor Dimuka ,Chief Executive ,Dinakaran ,
× RELATED வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல...