சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 6 மாதத்திற்குள் 2வது முறையாக ரயில் கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்தி அதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஓராண்டிற்கு கிட்டத்தட்ட ரூ.1000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்க ஒன்றிய அரசு வழிவகை செய்தது. இந்தச் சூழ்நிலையில், வரும் 26ம் தேதி முதல் 215 கிலோ மீட்டர் மேல் சாதாரண வகுப்பில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும், மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதி கொண்ட சாதாரண மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவும் உயர்த்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆண்டிற்கு இரண்டு முறை இதுபோன்ற கட்டண உயர்வு என்பது நியாயமற்ற செயல். எனவே, தற்போது உயர்த்தப்பட்டுள்ள ரயில்வே கட்டண உயர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
