- துணைத் தலைமை துணை நிதி திரட்ட
- சென்னை
- ஸ்டாலின்
- போர்ட் கிறிஸ்துமஸ்
- சென்னை கிழக்கு மாவட்ட நிறுவனம்
- போர்ட் பிளாக்
சென்னை: வாக்குரிமை என்பது நம்முடைய கடமை அல்ல, உரிமை வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடாமல் சரி செய்யுங்கள் என்று சென்னை, துறைமுகம் கிறிஸ்துமஸ் பெருவிழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னை கிழக்கு மாவட்ட கழகம், துறைமுகம் தொகுதியில் நடந்த கிறிஸ்துமஸ் பெருவிழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, ஏழை – எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
சென்னை கிழக்கு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் தனிகவனம் செலுத்திச் சிறப்பாக நடத்தக்கூடியவர். அதனால்தான் இன்றைக்கு இந்த கிறிஸ்துமஸ் விழாவைக் கூட வெறும் ஒரு கொண்டாட்டமாக இல்லாமல், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் சேர்த்து, இந்த நிகழ்ச்சியை அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கும்படி சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்.
சமீபத்தில் தேர்தல் ஆணையத்தின் மூலமாகச் குறுக்கு வழியில் எஸ்.ஐ.ஆர் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அதன் பாதிப்புகளை முதல்வர் தான் முதன்முதலில் எடுத்துக்கூறினார். குறிப்பாக, சிறுபான்மையினருடைய வாக்குகள், பெண்களுடைய வாக்குகள், ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாக்குகள் தொடர்ந்து திமுகவிற்கு செல்கின்றன. என்ன முயற்சி செய்தாலும், அவை ஒன்றிய பா.ஜ அரசுக்கு கிடைக்கவில்லை என்பதால், அவர்களின் வாக்குகளை தேடித்தேடி நீக்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் இந்த எஸ்.ஆர். கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்குகளை தமிழ்நாட்டிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
இங்கே வந்துள்ள கிறிஸ்தவப் பெருமக்களிடம் கேட்டுக்கொள்வது ஒரு முக்கியமான வேண்டுகோள். வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, நம்முடைய உரிமை. இங்கே வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாக்குகள் பட்டியலில் உள்ளனவா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால் நம் கழகத்தின் பி.எல்.ஓக்களைச் சந்தித்துப் படிவம் 6-ஐ வழங்கி, மீண்டும் விண்ணப்பியுங்கள். வரும் ஜனவரி 18ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் உள்ளது. இதனை நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
நாங்கள் கிறிஸ்துமஸ் அன்று கேக்கை இஸ்லாமியர்களுக்கும் சேர்த்து அனுப்புவோம். ரம்ஜான் அன்று எங்களுக்கு பிரியாணி வந்துவிட்டதா என்று முதலில் பார்ப்போம். பொங்கல் அன்று அனைவரும் இணைந்து கொண்டாடுவோம்.
இதுதான் தமிழ்நாட்டின் தனித்துவம். நீங்கள் என்னதான் மதக்கலவரத்தை தூண்டினாலும், உங்கள் முகத்தில் தமிழ்நாட்டு மக்கள் கரியைத்தான் பூசுவார்கள். இன்றைக்கு அண்ணா, கலைஞர் வழியில் சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதல்வர் சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளில் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்குப் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்துள்ளது. கிறிஸ்தவ மாணவர்களுக்கு மட்டும் ரூ.7 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.13 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு தலா ரூ.37,000 மானியத்தை நம் திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது. தேவாலயங்களைப் புனரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
