- தந்தனா ஆர்ப்பாட்டம்
- மதுரா
- திருப்பரங்குந்திரா
- ஐயோத்தியா
- திருமாவளவன்
- அயோத்தி
- மதுரை
- Visika
- திருப்பரங்குந்தரம் தீபா
- அகத்ஸி
மதுரை: திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது என திருமாவளவன் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், மதவெறி அரசியலை கண்டித்து விசிக சார்பில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: இந்த போராட்டத்தை அறிவித்ததில் இருந்து எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பிகிறார்கள். திருப்பரங்குன்றம் பற்றி பேசுவதற்கு இந்த மண்ணை சேர்ந்தவன் என்பதே எனக்கான தகுதி. திருப்பரங்குன்றம் அமைதியாக இருக்குமிடம்.
இந்தியாவில் இந்து சமுதாயத்தை சார்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் கொடுமைகளை கண்டித்து என்றாவது ஒரு நாள் பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் போராடிய சான்று இருக்கிறதா?. எதை வைத்தாவது அரசியல் செய்து சமூக பதற்றத்தை உருவாக்கி ஆதாயம் தேடுவதே அந்த கும்பலின் நோக்கம். ஆர்எஸ்எஸ், பாஜவினரால் பாதிக்கப்பட போவது இந்துக்கள் தான். அண்ணாமலை உள்ளிட்ட ஒவ்வொருவரும் இந்துக்களின் துரோகிகள். அண்ணாமலையும், நயினாரும் இந்துக்களுக்கு தான் உண்மையில் எதிராக இருக்கிறார்கள்.
நீதிமன்றம் நிபந்தனை விதித்தபோதும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்கிறார்கள். தர்காவை இடிப்பது தான் அவர்களது நோக்கம். திருப்பரங்குன்றத்தை உங்களால் அயோத்தியாக மாற்ற முடியாது. உபியில் இருப்பதை போல அல்ல, தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் பெரும்பான்மையாக உள்ளோம். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றி விட்டால் கல்வி, சோறு எல்லோருக்கும் கிடைத்து விடுமா? எய்ம்ஸ் வந்து விடுமா?. அது சர்வே கல். திருப்பரங்குன்றம் மத நல்லிணக்கம் நிறைந்த மலை. சங்கிகள் நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறையில் இருக்கிறார்கள். ஆணவ கொலைகள் நடந்தபோது நீதிபதிகள் சென்று பார்த்ததுண்டா?.
தமிழ்நாட்டில் 175 மசூதிகளை, தர்காக்களை அடையாளம் கண்டு வைத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இடிக்கப்பட வேண்டிய மசூதிகள், தர்காக்களை கணக்கெடுத்து வைத்துள்ளார்கள். அந்த திட்டத்தில் ஒன்று தான் திருப்பரங்குன்றம். இவ்வாறு பேசினார்.
விஜய்யும், சீமானும் பாஜ பெற்ற பிள்ளைகள்
‘பிராமண கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடிப்போம் என சொன்ன பின்னர் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. சீமான் தமிழ் தேசியம் பேசவில்லை. பிராமண தேசியம் பேசுகிறார். அப்படி பேசும் இருவரை தமிழ்நாட்டு மக்கள் அடையாளம் கண்டு விட்டார்கள்.
ஒருவர் விஜய், இன்னொருவர் சீமான். திமுக ஒரு தீய சக்தி என்பது தான் விஜயின் ஒரே நோக்கம். திமுகவை வீழ்த்த நினைக்கும் ஆர்எஸ்எஸ்க்காக கட்சி துவங்கியிருக்கிறார் விஜய். அவர் தமிழ்நாட்டு மக்களுக்காக கட்சி துவங்கவில்லை. திமுகவை மட்டுமல்ல. பெரியார், அம்பேத்கர் பேசிய அரசியலை வீழ்த்துவதற்காக பேசுகிறார். விஜய்யும், சீமானும் பாஜ பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகி விட்டது. விஜய் நேரடியாக பைனல் மேட்ச் விளையாடி ஆட்சிக்கு வந்து விடுவாராம். அரசியல் அறியாமை இது. அப்படியெல்லாம் யாராலும் வர முடியாது. யாரோ அவரை ஏற்றி விடுகிறார்கள்’ என்று திருமாவளவன் கூறினார்.
