×

ரயில்வே வாரிய கொள்கை அளவிலான ஒப்புதல் மெட்ரோ – சென்னை பறக்கும் ரயில் சேவை 3 மாதத்திற்குள் இணைப்பு: பறக்கும் ரயில் சேவை மாநில அரசிடம் ஒப்படைப்பு; இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் தொடக்கம்

சென்னை: ரயில்வே வாரியம் கொள்கை அளவிலான ஒப்புதலையடுத்து 3 மாதத்திற்குள் மெட்ரோவுடன் சென்னை பறக்கும் ரயில் சேவை இணைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரி வரை மொத்தம் 17 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. பறக்கும் ரயில் சேவையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி, ரயில் சேவையை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கருத்தில் கொண்டு பறக்கும் ரயில் சேவையை மாநில அரசிடம் ஒப்படைக்குமாறு நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ரயில்வே வாரியத்திலுள்ள அனைத்து பிரிவுகளும் ஏற்கனவே திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், வாரிய தலைவரின் ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை பறக்கும் ரயில் -மெட்ரோ ரயில் இணைப்பு கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, சென்னை பறக்கும் ரயில்- சென்னை மெட்ரோ ரயில் இணைப்பிற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கி உள்ளது.

அடுத்தகட்டமாக, தமிழ்நாடு அரசுக்கும் சென்னை மெட்ரோ ரயில்வேக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து (குமடா) மூலம் அடுத்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்படும். அதன்படி இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கப்படும். மேலும் இரண்டு ஆண்டிற்குள் சீரமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் தடத்திற்கு இணையான சேவை வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில்வே வாரிய கொள்கை அளவிலான ஒப்புதல் மெட்ரோ – சென்னை பறக்கும் ரயில் சேவை 3 மாதத்திற்குள் இணைப்பு: பறக்கும் ரயில் சேவை மாநில அரசிடம் ஒப்படைப்பு; இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Railway Board ,Metro ,Chennai ,Train ,Chennai Beach Railway Station ,Velachery… ,Chennai Flying Train ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...