×

தகர கொட்டகை மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட பீதி; உபி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி: 36 பேர் படுகாயம்


ஷாஜஹான்பூர்: உபி மாநிலத்தில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியானார்கள். 36 பேர் படுகாயமடைந்தனர். உபி மாநிலம் பாரபங்கியில் புகழ்பெற்ற அவசனேஷ்வர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஷ்ராவண மாதத்தில் இக்கோயிலில் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்யும் வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். புனித நீர் அபிஷேகத்துக்காக நேற்று காலை கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது கோயில் வளாகத்தில் மின்சார வயர்களில் தொங்கியய படி குரங்குகள் சென்றுள்ளன. அப்போது திடீரென மின்சார வயர் அறுந்து ஒரு தகர கொட்டகையின் மீது விழுந்தது. இதனால் பக்தர்களிடையே பயங்கர பீதி ஏற்பட்டது.

மின்சாரம் தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் பக்தர்கள் அங்குமிங்கும் ஓடினர். இதில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் முபாரக்புராவை சேர்ந்த பிரசாந்த் (22) என்ற வாலிபரும், அடையாளம் தெரியாத இன்னொரு பக்தரும் உயிரிழந்தனர். இதில்,36 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த பக்தர்கள் 10 பேர் திரிவேணிகஞ்ச் சமுதாய சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமானதையடுத்து அவர்கள் உயர் மருத்துவ சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 26 பேர் ஐதர்கார் சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமானது.

இதையடுத்து அவரை உயர் சிகிச்சைக்காக வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,பாரபங்கியில் 2 பேர் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஆனால் மாநில போலீஸ் டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா கூறுகையில்,‘‘பாரபங்கியில் நடந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலியானார்கள். கூட்ட நெரிசல் காரணம் அல்ல. நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது’’ என்றார்.

The post தகர கொட்டகை மீது மின்சார கம்பி அறுந்து விழுந்ததால் ஏற்பட்ட பீதி; உபி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி: 36 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Panic ,UP ,Shahjahanpur ,Avashaneshwar ,Barabanki, UP ,Shravan ,Lord Shiva ,
× RELATED சிக்கிமில் லேசான நில அதிர்வு