×

பெரணமல்லூர் அருகே ஆறுமுக சுவாமி ஆடி குருபூஜை விழா குழந்தைவரம் வேண்டி மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

பெரணமல்லூர் : பெரணமல்லூர் அருகே மகான் ஆறுமுக சுவாமி ஆடி குருபூஜை விழாவில் குழந்தை வரம் வேண்டி சுமங்கலி பெண்கள் மடிப்பிச்சை பெற்று மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்டனர்.திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் வாழ்ந்த மகான் ஆறுமுக சுவாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்து கொண்டு அருளாசி வழங்கி வந்தார்.

இந்நிலையில் வயது முதிர்ந்த தருவாயில் ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடையபோவதாகவும், அந்த இடத்தில் கோயில் கட்டி வருடந்தோறும் ஆடி அமாவாசை நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள், விரதமிருந்து இங்கு வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் மடிபிச்சை பெற்று அருகில் உள்ள குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறி ஜீவசமாதி அடைந்தார்.

அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பொதுமக்கள் கோயில் கட்டி வணங்கியும், ஆடி அமாவாசை நாளில் குருபூஜை விழாவை சிறப்பாக நடத்தி வருகின்றனர். தற்போது ஆடிமாதம் முன்னிட்டு கடந்த 22ம்தேதி காப்பு கட்டி பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டு விழா தொடங்கியது.

பின்னர் 23ம் தேதி கூழ்வார்த்தல் விழா நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஆடி அமாவாசை தினமான நேற்று 189ம் ஆண்டு ஆறுமுக சுவாமி குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், காலை 10மணிக்கு பக்தர்கள் வேண்டுதல் பொருட்டு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் 11 மணிக்குமேல் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி கோயில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர். தொடர்ந்து சுமங்கலி பெண்கள் கோயில் அருகில் உள்ள குளக்கரையின் படிக்கு சென்று பிரசாதத்தினை வைத்து பயபக்தியுடன் சுவாமியை வேண்டி மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டனர்.

வேண்டுதல் நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம் காணிக்கை செலுத்தினர். விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post பெரணமல்லூர் அருகே ஆறுமுக சுவாமி ஆடி குருபூஜை விழா குழந்தைவரம் வேண்டி மண்டியிட்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Arumuga Swamy Aadi Guru Puja festival ,Peranamallur ,Mahan Arumuga Swamy ,Kottupakkam ,Tiruvannamalai ,
× RELATED மரபும் புதுமையும் சந்தித்துக்...