×

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16 வரை முன்பதிவு

சென்னை: ரூ.37 கோடி மொத்த பரிசுத் தொகையுடன் நடைபெறவுள்ள ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16 ம் தேதி வரை cmtrophy.sdat.in, sdat.tn.gov.in என்ற இணையதளங்களில் முன்பதிவு செய்யலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. ரூ.83.37 கோடியில் 5 பிரிவுகளில், ஆகஸ்ட் 22 முதல் அக்டோபர் 12 வரை இப்போட்டிகளில் நடத்தப்படவுள்ளன. கடந்த 17ம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலமான முன்பதிவினை தொடங்கி வைத்தார்.

நம் திராவிட மாடல் அரசு அமைந்தது முதல், ஒவ்வொரு ஆண்டும் ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை’ கோலாகலமாக நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றனர். இந்த ஆண்டு (2025) முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2025 (Chief Minister’s Trophy Games – 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன.

இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் என மொத்தம் 83.37 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படவுள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு ஆகஸ்ட் 16 வரை முன்பதிவு appeared first on Dinakaran.

Tags : CM Cup ,Chennai ,Tamil Nadu Sports Development Commission ,Chief Minister's Cup' Games ,CM Cup Games ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...