*இயற்கையை காத்த இளைய தலைமுறை
கொடைக்கானல் : கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்கள், வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள், காலி மதுபாட்டில்களை வீசி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை வனத்துறையினர் தன்னார்வ அமைப்பினருடன் சேர்ந்து அவ்வப்போது அகற்றுவது வழக்கம்.
இதன்படி வனத்துறை சார்பில் முக்கிய சுற்றுலா தலங்களுக்குள் செல்லும் பிரதான சாலையான பசுமை பள்ளதாக்கு பகுதியின் சாலையோரங்கள், வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் குப்பைகள், காலி மதுபாட்டில்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.
இதில் கொடைக்கானல் பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சுமார் 1000 கிலோவுக்கு பிளாஸ்டிக் குப்பைகள், காலி மதுபாட்டில்களை சேகரித்தனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் குப்பைகள், காலி மதுபாட்டில்களை சாலையோரங்கள், வனப்பகுதிகளில் வீசி செல்ல கூடாது, குப்பை தொட்டிகளில் போட வேண்டும், அவ்வாறு வீசுவதால் வனவிலங்குகளுக்கு பல தீமைகள் ஏற்படும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து வனத்துறையினர் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகள், காலி மதுபாட்டில்களை வீசுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்ததுடன், இனி அவ்வாறு வீசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள், காலி மதுபாட்டில்கள் மறுசூழற்சிக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post கொடைக்கானலில் வனத்தில் வீசி சென்ற 1000 கிலோ பிளாஸ்டிக் குப்பை காலி மதுபாட்டில்கள் சேகரிப்பு appeared first on Dinakaran.
