×

தடை மீறி போராட்டம் நடத்துவதா? சீமானுக்கு ஐகோர்ட் கண்டனம்

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘ஏற்கனவே கடந்த 3ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கண்டதேவி கோயில் தேரோட்ட பாதுகாப்பு வழங்க வேண்டிய சூழல் இருப்பதால், சீமானுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது என்பதால் தான் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், சீமான் ஒரு யூடியூப் சேனலில், போலீஸ் வேண்டுமானால் கண்டதேவி கோயிலுக்கு பாதுகாப்புக்கு போகட்டும்’’ என பேசியுள்ளார் என கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘ஒரு அரசியல் கட்சி தலைவர் பங்கேற்பதற்காக, அதை காரணமாக கூறி மீண்டும் ஒரு போராட்டம் நடத்துவீர்களா? போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொதுவெளியில் பேசுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது.

தேரோட்டம் நடைபெறும் அன்றைய நாளில் அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக தடையை மீறி போராட்டம் நடத்துவேன் என்று கூறுவது அரசியல் கட்சிக்கு அழகல்ல. சட்டத்திற்கு முன் அனைவரும் சமமானவர்களே. ஒரு அரசியல் கட்சிக்கு போராட்டம் நடத்தவும், மக்களுக்காக குரல் கொடுக்கவும் உரிமை உள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமலும், பாதிக்கப்படாமலும் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அரசியல் கட்சியின் கடமையாகும்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டத்தை மீறி போராட்டம் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர் பொதுவெளியில் கூறும்போதும், ஆர்ப்பாட்டத்தின்போது அவதூறாக பேசும்போதும், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யாமலும் இருப்பது ஏன்?  எனவே, மனுதாரர் தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை 24 மணிநேரத்தில் பரிசீலித்து போலீசார் உரிய முடிவெடுக்க வேண்டும்’’ எனக் கூறி மனுவை முடித்து வைத்தார்.

* தமிழக அரசுக்கு நீதிபதி பாராட்டு
முதல் மரியாதை வழங்குவது உட்பட பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நேற்று முன்தினம் பலத்த பாதுகாப்புடன் பிரச்னையின்றி நடந்து முடிந்தது. நேற்றைய வழக்கு விசாரணையின்போது நீதிபதி பி.புகழேந்தி, தற்போதைய தமிழ்நாடு அரசு 17 ஆண்டுகளுக்கு பின்னர், கண்டதேவி கோயில் தேரோட்டத்தை சிறப்பாகவும், அமைதியாகவும் நடத்தியுள்ளதாக பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

The post தடை மீறி போராட்டம் நடத்துவதா? சீமானுக்கு ஐகோர்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Madurai ,Naam Tamilar Party ,Easwaran ,HC ,Thiruppuvanam market ,Madapuram ,Ajithkumar ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...