×

விரிகோட்டில் ரயில்வே கிராசிங் சாலையில் மேம்பாலம்

*விஜய் வசந்த் எம்.பி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மார்த்தாண்டம் : மார்த்தாண்டம்- கருங்கல் சாலையில் விரிகோடு ரயில்வே கிராசிங்-ல் ரயில்கள் சென்று வரும்போது ரயில்வே கேட்டுகள் மூடப்படும். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதனை தவிர்க்கும் வகையில் ஒன்றிய, மாநில அரசு பங்களிப்புடன் அந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென அதிகாரிகள் மாற்று வழி பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்கு விரிகோடு சுற்றுவட்டார பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரயில்வே கிராசிங் வழியாகவே உள்ள சாலை மார்க்கமாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும். மாற்று பாதையில் மேம்பாலம் அமைத்தால் விரிகோடு மக்கள் பஸ் போக்குவரத்திற்கு கடும் சிரமத்திற்குள்ளாவார்கள் என கூறி ரயில்வே பணி மேற்கொள்ள விடாமல் போராட்டம் நடத்தினர்.

விஜய் வசந்த் எம்.பி ஒன்றிய ரயில்வே அமைச்சர், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பொதுமக்கள் விரும்பும் வழியான விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் இரவு விரிகோடு சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் வைத்து, பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி மாலிக் முகமது ஆகியோருடன் விஜய்வசந்த் எம்.பி, தாரகை கத்பட் எம்.எல்.ஏ மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் விவாதித்தனர்.

பேச்சு வார்த்தைகளின் முடிவின்படி புதிய வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வது எனவும், விரிகோடு ரயில்வே கிராசிங் வழியாக மேம்பாலம் அமைக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து விஜய்வசந்த் எம்.பி கூறியதாவது:

ஏற்கனவே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில்வே மாற்றுப் பாதை வழியாக மேம்பாலம் வேண்டாம் எனவும், தற்போதைய விரிகோடு ரயில்வே கிராசிங் வழியாக பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பாதை வழியாகவே தான் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கேட்கிறீர் கள். இந்தக் கோரிக்கை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

புதிய பாதை வழியாக மேம்பாலம் அமைக்க பணி மேற்கொள்ளக் கூடாது. அதற்காக நாங்கள் அந்த மேம்பாலம் வேண்டாம் என அதிகாரிகளும் நாங்களும் முடிவு செய்துள்ளோம். ஆனால் அதை எழுத்துப்பூர்வமாக வந்தால் தான் அதற்கு முடிவு வரும். தற்போது ரயில்வே கிராசிங் வழியாக ரயில்வே மேம்பாலம் அமைக்க சாத்தியமானதா? என்பதை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

பாலம் அமைக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே சரியாக அப்பகுதியை ஆய்வு செய்து, அப்பகுதி நிலங்களை கையகப்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மக்கள் சரி என்றால் ரயில்வே துறை அதிகாரிகளின் உதவியுடன் தற்போதைய ரயில்வே கிராசிங் பாதை வழியாக ரயில்வே மேம்பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனை பொதுமக்கள் வரவேற்றனர்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்னகுமார், மேல்புறம் வட்டாரத் தலைவர் ரவிசங்கர், மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா ரவிசங்கர், உண்ணாமலைக் கடை பேரூராட்சி தலைவர் பமலா, மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் கிறிஸ்டா மற்றும் போராட்ட குழு தலைவர் ஸ்டான்லி உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post விரிகோட்டில் ரயில்வே கிராசிங் சாலையில் மேம்பாலம் appeared first on Dinakaran.

Tags : Flyover ,Virikot ,Vijay Vasanth ,Marthandam ,Marthandam-Karungal road ,Dinakaran ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...