×

குன்றத்தூரில் இன்று கந்தழீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்


குன்றத்தூர்: குன்றத்தூரில் பிரசித்தி பெற்ற வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் உபய கோயிலான அருள்மிகு நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. பல்லாண்டு பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேக விழா நடத்தப்படுவது வழக்கம். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கோயிலில் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தது. இதில், இக்கோயிலுக்கு முதன்முறையாக ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகத்துக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில், குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1ம் தேதி முதல் செல்லியம்மன் கோயிலில் கிராம தேவதை வழிபாடு, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.

பின்னர் மங்கல இசையுடன் நவக்கிரக ஹோமம் பூர்ணாஹூதியுடன் தீபாராதனை, அஷ்டலட்சுமி ஹோமம், அக்னி சங்க்ரஹனம், தீர்த்த சங்க்ரஹனம், தீபாராதனைகள் நடந்தன. இதையடுத்து பரிகார பூஜை, கும்ப அலங்காரம், யாத்ரா ஹோமம், பிரதான கும்பங்கள், யாகசாலை பிரவேசம், முதல் கால, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை மற்றும் உபசாரங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, இன்று காலை மங்கல இசையுடன் நான்காம் கால யாக பூஜையும், தீபாராதனை, சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பின்னர் மூல ஆலயத்தில் பிரதான கலசங்கள் எழுந்தருளி விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார சந்நிதி தெய்வ விமானங்கள், நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் மூலவர் விமானத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை மிக விமரிசையாக நடத்தி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தீபாராதனையும் மகா அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இவ்விழாவில் குன்றத்தூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சர்வ சாதக திலகம் பெருநகர் பாலாஜி சிவாச்சாரியார், சர்வசாதகம் திருவள்ளூர் ஹரிபிரபு சிவாச்சாரியார், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகேய குருக்கள், ஸ்தானிகர்கள் நந்தகுமார், ரகு, முரளி, ரவி, அருண், பிரதாப் உள்ப பல்வேறு சிவாச்சாரியார்கள் பங்கேற்று தேவார, திருவாசக, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, இக்கோயிலில் இன்று மாலை திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்தி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்ய தேவையான அடிப்படை வசதிகள், முதலுதவி, போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இங்கு குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை குன்றத்தூர் முருகன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரை கண்ணன் தலைமையில் அறங்காவலர்கள் சரவணன், குணசேகரன், சங்கீதா கார்த்திகேயன், ஜெயக்குமார், கோவில் செயல் அலுவலர் கன்யா, அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

The post குன்றத்தூரில் இன்று கந்தழீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kundrathur ,Maha Kumbabhishekam ,Kandazheswarar Temple ,Valli ,Deivanai Udanurai Subramaniaswamy Temple ,Arulmigu Khajumugavalli Udanurai Kandazheswarar Temple ,Kumbabhishekam ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!