சென்னை: சாலை விபத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு, மோசமான நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மண்டை ஓட்டில் கடுமையான முறிவு ஏற்பட்டு, மூளை திசுக்கள் வெளியில் தெரியும் நிலையில் இருந்தது. மயங்கிய நிலையில் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் மூளைத்தொற்று பாதிக்கப்பட்ட சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் ரங்கநாதன் ஜோதி தலைமையில் அவசர சிகிச்சைப்பிரிவு குழுவினர் நோயாளிக்கு உடனடியாக அவசர நரம்பியல் அறுவை சிகிச்சையை வழங்கினர். அதன் மூலமாக சிதைந்த மண்டை ஓட்டின் சிதிலங்கள் அகற்றப்பட்டன. மேலும், மூளையின் உறைபோன்ற பாதுகாப்பு பகுதியான டூரா, மறுபடி உருவாக்கப்பட்டது. இதற்காக அவரது தொடையிலிருந்து தசை உறை போன்ற பகுதி (fascia lata) எடுத்துப் பயன்படுத்தப்பட்டது. சிகிச்சை முடிந்த 7வது நாளில் அவர் கண் விழித்தார். படிப்படியாக அவரது நுரையீரல்களும் குணமடைய தொடங்கின. 10 நாட்களில் அவருடைய வெண்டிலேட்டர் மருத்துவர்களால் அகற்றப்பட்டுவிட்டது.
தொடர் சிகிச்சையால் குணமடைந்து வரும் நிலையில் அவருக்கு ஹைட்ரோசெபலஸ் என்ற பிரச்னை உருவெடுத்தது. அதாவது மூளையில் உள்ள செரிப்ரோஸ்பைனல் எனும் திரவம் சேர்ந்து, அழுத்தத்தை ஏற்படுத்தியது.இதனையடுத்து இரண்டாவது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல் நிலையைச் சீராக்குவதற்காக, மூளையில் சேர்ந்திருந்த திரவத்தை வடியச் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக வெண்ட்ரிகுலோபெரிடோனியல் ஷண்ட் எனப்படும் கருவி பொருத்தப்பட்டது. நரம்பு அறுவை சிகிச்சை நிபுணர்களும், அவசர சிகிச்சைப்பிரிவு குழுவும் ஒருங்கிணைந்து, துல்லியமான நேரத்தில் இதை செய்து முடித்தனர். தற்போது, அவர் முழுமையாக குணமடைந்து வருகிறார்.
The post சாலை விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இளைஞருக்கு வெற்றிகரமாக மூளை அறுவை சிகிச்சை: வடபழனி காவேரி மருத்துவமனை தகவல் appeared first on Dinakaran.
