ஜபல்பூர்; மத்திய பிரதேசத்தில் 45 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த விவசாயின் 18 ஏக்கரை நிலத்தை அபகரிக்க அவரை கொன்ற ஆன்லைன் காதலியை போலீசார் கைது செய்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரகுமார் திவாரி (45) என்பவர் பகுதி நேர ஆசிரியராகவும், விவசாயியாகவும் பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்தமாக 18 ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால், 45 வயதாகியும் திருமணம் ஆகாத விரக்தியில் இருந்தார். கடந்த மாதம், பிரபல ஆன்மீக குருவான அனிருத்தாச்சாரியார் மகாராஜின் சொற்பொழிவின் போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘குருவே, எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை; சொந்தமாக 18 ஏக்கர் நிலம் உள்ளது; ஆனால் அதை கவனித்துக் கொள்ளவோ, எனக்கு துணையாகவோ யாரும் இல்லை’ என்று அவர் உருக்கமாகப் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் இந்திரகுமார் திவாரியின் வைரலான காணொளியைக் கண்ட மோசடிக் கும்பல் ஒன்று, 18 ஏக்கர் நிலத்துக்கு சொந்தமான அவரை தங்கள் வலையில் வீழ்த்த திட்டமிட்டது. சஹிபா பானு என்ற பெண், ‘குஷி திவாரி’ என்ற போலி பெயரில் சமூக வலைதளம் மூலம் இந்திரகுமாரைத் தொடர்பு கொண்டு, அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். சில நாட்கள் இருவரும் ஆன்லைனில் பேசிக் கொண்டனர்.
இதை நம்பிய இந்திரகுமார், அவரைத் திருமணம் செய்வதற்காக உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூருக்குச் சென்றுள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில நாட்களில், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இந்திரகுமாரை படுகொலை செய்து, அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்துள்ளனர். பின்னர், கடந்த 6ம் தேதி, உத்தரப் பிரதேசத்தின் குஷிநகர் தேசிய நெடுஞ்சாலை அருகே, கழுத்தில் கத்தி குத்தப்பட்ட நிலையில் இந்திரகுமாரின் உடல் புதரிலிருந்து மீட்கப்பட்டது. விசாரணையில், சொத்துக்காக இந்திரகுமாரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை அந்தப் பெண்ணுடன் சேர்ந்த கும்பல் கொலை செய்தது தெரியவந்தது. இவ்வழக்கில் சஹிபா பானுவை போலீசார் கைது செய்த நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய மற்றவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
The post வைரல் பேச்சால் வந்தது வினை ஆசிரியரை திருமணம் செய்து கொன்ற ஆன்லைன் காதலி: 18 ஏக்கர் நிலத்திற்காக நடந்த சதி; மத்திய பிரதேசத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.
